Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

திருமாவளவனின் உண்ணாவிரதம் ஆரம்பமானது

இலங்கையில் அழிவை எதிர்கொண்டு ஆபத்தில் சிக்கியிருக்கும் தமிழ் மக்களைக் காப்பதற்காக உலகத் தமிழர்கள் எல்லோரும் ஓரணியில் திரளவேண்டிய தருணம் இது. அந்த ஐக்கிய எழுச்சியை உருவாக்குவதற்காகவே நான் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளேன்.

இவ்வாறு விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல். திருமாவளவன் தமது சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தில் இன்று குதிப்பதற்கு முன்னர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

”இலங்கையில் இனவெறிப் போரை நிறுத்துமாறும், அமைதிப் பேச்சை உடன் ஆரம்பிக்குமாறும் இலங்கை அரசை இந்திய மத்திய அரசு வலியுறுத்த வேண்டும். உலகத் தமிழினம் ஒன்றுபட்டு, வெகுண்டெழுந்து இந்த அழுத்தத்தை இந்திய மத்திய அரசுக்குக் கொடுக்க வேண்டும். அதற்கான இறுதித் தருணம் இதுதான்.

உலகத் தமிழினத்தைத் தட்டி எழுப்பி, வெகுண்டெழச்செய்யும் உணர்வு நிலையை ஏற்படுத்தியே இந்த உண்ணாநிலைப் போராட்டத்தில் குதிக்க முடிவெடுத்தேன். தங்கள் உரிமைகள் வேண்டி கடந்த இரண்டரை தசாப்தங்களாக தமிழர்கள் நடத்தும் போராட்டமும் அவர்களும் அழிக்கப்பட்டு விடவோ, ஒழிக்கப்பட்டு விடவோ நாம் அனுமதிக்க முடியாது. அந்த இழிகொலையைப் பார்த்து நாம் வாளாவிருக்கக்கூடாது.

தமிழர்களின் நலனுக்காக குரல் கொடுங்கள் என்று தமிழகத்தில் உள்ள தரப்புகள் எல்லாம் சேர்ந்து அழுத்தம் கொடுத்து, பல போராட்டங்களை நடத்தி, தமிழகத்தின் ஒட்டு மொத்தக் கருத்தை வெளிப்படுத்தியும் இந்திய மத்திய அரசு அசைந்து கொடுப்பதாக இல்லை. தமிழகத்தினதும் உலகத் தமிழர்களினதும் உணர்வுகளுக்கு மத்திய அரசு மதிப்புக் கொடுப்பதாக இல்லை.

இந்திய மத்திய அரசு அமைதி காக்கின்றது அல்லது இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக நடந்து கொள்கின்றது என்பதற்காக நாம் சும்மா இருந்து விட முடியாது. தமிழக மக்களும் புலம்பெயர்வால் தமிழர்களும் ஓரணியில் எழுந்து, தமிழர்களுக்காகக் குரல் கொடுத்து, மத்திய அரசை அசையச் செய்ய வேண்டும்.

அதற்காக எல்லா இடங்களிலும் ஈழத் தமிழர்களுக்காக குரல் எழுப்பும் ஜனநாயகப் போராட்டங்கள் மக்கள் பேரெழுச்சியாக வெடித்து வெளிப்பட வேண்டும். நமது எல்லாத் தரப்புகளும் ஒன்றிணைந்து உலகளாவிய ரீதியில் பெரிய அளவில் அழுத்தம் கொடுத்தால்தான் இந்திய மத்திய அரசு அசைந்து கொடுக்கும். அப்போதுதான் தமிழினம், பேரழிவு ஆக்கிரமிப்பில் இருந்தும், அழித்தொழிப்பு நிலையிலிருந்தும் தப்பிப் பிழைக்க வாய்ப்புக் கிட்டும்.அந்த நோக்கிலேயே இந்தப் போராட்டத்தில் குதித்திருக்கிறேன்.” என்றார் திருமாவளவன்.

Exit mobile version