கருத்துக்களை கருத்துக்களால் வெல்ல முடியாத ஜனநாயக விரோத அரசின் தமிழர் விரோதச் செயற்பாட்டின் ஓரங்கமாகவே இச்சம்பவத்தை பார்க்கின்றோம். தமிழ் மக்களின் தனித்துவமான அடையாளத்தினை பிரதிபலிப்பவர்கள் மீதான இத்தகைய தாக்குதலானது இனவாத அரசின் போருக்குப் பிந்திய கட்டமைப்பு சார் இன அழிப்பின் நீட்சியாகும்.
குறிப்பாக திருமதி அனந்தி எழிலன் அவர்கள் காணாமற் போன உறவுகளை மீட்பதில் அவர்களுக்காக போராடுவதில் மிகத் தீவிரமாகச் செயற்பட்டுவருபவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவரின் இத்தகைய செயற்பாடுகளும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் ஒருவரின் மனைவி என்பதுமே இவர் குறிப்பாக இலக்கு வைக்கப்படக் காரணமாகும்.
கோழைத் தனமான இத்தகைய தாக்குதல்களைத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெறாது தடுக்கப்பட வேண்டுமாயின் தமிழ்த் தேசமானது சிங்கள தேசத்தின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு, தமிழ்த் தேசத்தின் இறைமை அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையில் ஒரு நாட்டிற்குள் இறைமையுள்ள தமிழ்த் தேசமும் சிங்கள தேசமும் இணைந்த வகையில் உருவாகும் தீர்வு ஒன்று அடையப்படுவதே ஒரே வழியாகும் என்பதனைவே மேற்படி தாக்குல் சம்பவங்கள் மீண்டும் மீண்டும் வெளிப்படுத்துகின்றது.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செல்வராசா கஜேந்திரன்
தலைவர் பொதுச் செயலாளர்