திருநங்கைகளை 3-வது பாலினமாக அங்கீகரித்து உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றம், கல்வி, வேலைவாய்ப்புகளில் திருநங்கைகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
மேலும், பொருளாதார, சமூகரீதியில் திருநங்கைகளை பின்தங்கியவர்களாக அங்கீகரிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுநாள் வரை திருநங்கைகள் தங்களது பாலினத்தை ஆண் அல்லது பெண் ஆக குறிப்பிட நிர்ப்பந்திக்கப்பட்டு வந்த நிலையில், இத்தீர்ப்பு அவர்களுக்கு சமூக அங்கீகாரத்தை வழங்கி உள்ளது.
இனிமேல் கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்புகளில் மூன்றாவது பாலினம் என்ற அடிப்படையில் திருநங்கைகள் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்றும், அவர்கள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக (OBC) கருதி இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
இதன்மூலம் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இனியும் திருநங்கைகளுக்கு பாரபட்சம் காட்டாமல் சம வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். இது தொடர்பான சட்டதிருத்தத்தை இன்னும் 6 மாத காலத்திற்குள் கொண்டுவருவதற்கான உரிய நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.
மேலும் திருநங்கைகளுக்கு சமூகத்தில் ஏற்பட்டுள்ள களங்கத்தை போக்க பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளையும், சமூக நலத்திட்டங்களையும் மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
அத்துடன் திருநங்கைகளுக்கு சிறப்பு பொது கழிப்பறைகளை கட்டவும், அவர்களின் மருத்துவ பிரச்னைகளை கவனிக்க சிறப்பு துறைகளை அமைக்க வேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் ஒரு நபர் தனது பாலினத்தை அறுவை சிகிச்சை மூலம் மாற்றிக்கொண்டால், அந்த பாலினத்தை பெற அவளுக்கு அல்லது அவனுக்கு உரிமை உள்ளது; அவர்களை வேறுபடுத்தி பார்க்கக்கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
குற்றவுணர்வுள்ள மத்தியதர வர்க்க சமுக்கப் பிரிவினரைத் திருப்திப்படுத்தும் இத் தீர்ப்பை கருணாநிதி உட்பட பலர் வரவேற்றுள்ளனர். எது எவ்வாறாயினும் திருநங்களைகளை சமூகத்தின் பொதுவான சமூகத்தோடு இணைப்பதற்கு இத் தீர்ப்பு பயன்படும்.