மன்னார் திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழியில் நேற்றும் ஆறு எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நேற்று வரை இந்த மனித புதைகுழியிலிருந்து 32 எலும்புக்கூடுகள், மற்றும் மண்டையோடுகள் , மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் முழுமையற்ற மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.
முழுமையாகக் காணப்படும் எலும்புக்கூடுகள் அடையாளம் இடப்பட்டு இலக்கமிடப்பட்டுள்ளன. நேற்று மன்னார் மாவட்ட நீதிவான் செல்வி ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் சட்டவைத்திய நிபுணர் டி.எல். வைத்தியரட்ண தலைமையில் புதைகுழி தோண்டும் பணி இடம் பெற்றது. இதன்போது ஆறு எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டதுடன் பெண்கள் அணியும் செப்பு தாயத்து ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
திருக்கேதீஸ்வரம் மாந்தை வீதியில் குடிநீர் விநியோகத்திற்காக குழாய்களை நிலத்திற்கு அடியில் புதைப்பதற்காக கடந்த மாதம் 20 ஆம் திகதி குழிதோண்டப்பட்டபோது மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனையடுத்து இவ்விடயம் குறித்து மன்னார் மாவட்ட நீதிமன்றத்திற்கு பொலிஸார் அறிவித்தனர். மன்னார் மாவட்ட நீதிவான் செல்வி ஆனந்தி கனகரட்ணம் தலைமையில் டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி புதைகுழி தோண்டும் பணி ஆரம்பமானது. நேற்று ஆறாவது நாளாக காலை முதல் மாலை வரை புதைகுழி தோண்டப்பட்டது. நேற்றைய தினம் ஆறு எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து புதையில் இருந்த எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது.
நாள்தோறும் புதைகுழி தோண்டப்படும் போது தொடர்ந்தும் எலும்புக்கூடுகளும், மண்டையோடுகளும் மனித எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டு வருவதனால் மேலும் பல எலும்புக்கூடுகள் இந்தப் புதைகுழிக்குள் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
நேற்று முன்தினம் புதைகுழிதோண்டப்பட்டபோது ஆறுவயது சிறுவன் ஒருவனது எலும்புக்கூடும் கண்டுபிடிக்கப்பட்டது. அன்றையதினம் இந்த எலும்புக்கூட்டின் தலைப்பகுதி மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டது. நேற்றைய தினம் முழுமையான பகுதியும் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
புதைகுழிக்குள் இன்னும் எலும்புக்கூடுகள் இருக்கலாம் என்பதால் மெதுவாகவே தோண்டும் பணியை மேற்கொள்ளவேண்டியிருப்பதாக சட்ட வைத்திய நிபுணர் டி.எல். வைத்தியரட்ண தெரிவித்துள்ளார்.
திருக்கேதீஸ்வரம் மாந்தை வீதியின் ஓரமாக இந்தப் புதைகுழி அமைந்துள்ளது. இதுவரை எட்டரை மீற்றர் நீளத்திற்கும் 1.8 மீற்றர் அகலத்திற்கும் புதைகுழி தோண்டப்பட்டுள்ளது. 1.1 மீற்றர் ஆழம் வரையிலேயே இதுவரை குழிதோண்டப்பட்டிருக்கிறது. இந்த குழிக்கு அருகில் மேலும் பல எலும்புக்கூடுகள் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதால் அப்பகுதியையும் தோண்டும் முகமாக நேற்று அருகிலுள்ள சிறிய காடுகள் துப்புரவு செய்யப்பட்டது. இதேபோல் 2010 ஆம் ஆண்டு குறித்த வீதி புனரமைப்புச் செய்யப்பட்ட போது மூன்று அடிக்கு அகலமாக்கப்பட்டதாகவும் தெரிகின்றது. இதனால் வீதியை உடைத்து அப்பகுதியிலும், தோண்டவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி விக்கிரமபாகு கருத்து வெளியிடுகையில் போரின்போது படையினரிடம் ஒப்படைக்கப்பட்டவர்களே இவ்வாறு எலும்புக்கூடுகளாக மீட்கப்பட்டுக் கொண்டிருப்பதாக அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
போர்க் காலத்தின் போது படையினரிடம் மக்கள் சரணடைந்தார்கள். அதேபோல், அருட்தந்தை பிரான்ஸிஸ் ஜோசப் தலைமையில் பலர் படையினரிடம் சரணடைந்தனர். ஆனால், இன்னமும் இவர்கள் குறித்த தகவல்கள் தெரியவில்லை. ஆகவே, மன்னாரில் தற்போது மீட்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் சடலங்கள் இவர்களுடையதாகவும் இருக்கலாம் என்ற சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அரசு இதை உடனடியாக விசாரணைக்குட்படுத்த வேண்டும். அது மட்டுமல்லாது, இதுகுறித்த விசாரணையை ஐக்கிய நாடுகள் சபையும் உடனடியாக மேற்கொண்டு உண்மையை வெளியுலகிற்குக் கொண்டுவர வேண்டும் என்றார்
ஏற்கனவே அப்பகுதியிலிருந்து தோண்டியெடுக்கப்பட்ட 18 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட நிலையில் நேற்று அப்பகுதியில் மீண்டும் எட்டு எலும்புக்கூடுகள் தோண்டியெடுக்கப்பட்டுள்ளன. இதுவரை மொத்தமாக 26 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் குழந்தைகளின் உடற்பாகங்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.