Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

திருகோணமலை கடற்படைத்தளத்தின் மீது விடுதலைப்புலிகள் விமானத்தாக்குதல்.

26.08.2008.
இலங்கையின் கிழக்கே திருகோணமலை கடற்படை தளத்தின் மீது செவ்வாய்கிழமை இரவு 9.20 மணியளவில் விடுதலைப்புலிகளின் விமானங்கள் குண்டு வீச்சுத்தாக்குதலை நடத்தியதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.

இந்தத் தகவலை உறுதி செய்துள்ள இலங்கை அரசின் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம், கடற்படைத்தளத்தின் மீது இரண்டு குண்டுகளை வீசிய பின்னர் விடுதலைப்புலிகளின் விமானங்கள் அங்கிருந்து சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளது.

இருப்பினும் அந்தத்தாக்குதல்கள் தோல்வியில் முடிந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையத்தளம் கூறியுள்ளது.

அதேவேளை, திருகோணமலை துறைமுகப் பகுதியில் ஒரு பெரிய குண்டு வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும், அதனையடுத்து துப்பாக்கி வேட்டுக்கள் மற்றும் பீரங்கி வேட்டுக்கள் ஆகியன தொடர்ந்து வெடித்ததாகவும் திருகோணமலை வாசிகள் கூறுகின்றனர்.

இந்தச் சம்பவத்தில் காயத்துக்கு இலக்கான கடற்படையினர் குறைந்தது 10 பேர் திருகோணமலை அரசினர் மருத்துவமனையில் சிகிச்சைக்கென அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தாக்குதலையடுத்து தாக்குதல் நடத்திய விடுதலைப் புலிகளின் விமானங்களை தேடியழிப்பதற்காக வன்னி பிரதேசத்துக்கு விமானப் படையின் குண்டு வீச்சு விமானங்கள் சென்று வந்ததாக வடபகுதியிலிருக்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமானப் படையின் இந்த வான்வழித் தாக்குதல்களினால் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக வெளியாகவில்லை.

BBC.

Exit mobile version