இந் நிகழ்வில் பெருந்தொகையான சிங்களவர்களும், புத்த பிக்குகளும் பங்குகொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் இந்தப் பிரதேசத்தில் பாரிய நில ஆக்கிரமிப்பைச் செய்து பௌத்த தொல்பொருள் ஆராய்ச்சி நிலையம் என்ற பெயரில் பௌத்த நிலையங்களை அமைக்க அரசின் பூரண ஆதரவுடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இப்பகுதியைச் சேர்ந்த தமிழ் முஸ்லிம் மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவோடிரவாக சேருவில பெரிய விகாரையிலிருந்து தோப்பூர் ஊடாக புத்தர் சிலை ஒன்று கொண்டுவரப்பட்டு மலைப்பகுதியில் வைக்கப்பட்டுள்ளது.
வெள்ளி இரவு சேருவில, சேருநுவர, கல்லாறு, பிலக்ஸ் போன்ற பிரதேசங்களிலிருந்து நூற்றக்கணக்கான சிங்களவர்கள் பஸ்கள் மூலம் இந்தப் பகுதிக்கு அழைத்து வரப்பட்டு மலைப்பகுதியில் புத்தர் சிலை வைக்கப்பட்டது. இதனையடுத்து பெருந்தொகையான பட்டாசுகளை அவர்கள் கொளுத்தி பெரும் ஆரவாரம் செய்தனர்.
மலையடிவாரம் முதல் மலை உச்சிக்குச் செல்லும் வரை பல வர்ணங்களில் மின் விளக்குகள் வைக்கப்பட்டிருந்தன. இந்தப் பகுதியெங்கும் பொலிஸாரும், கடற்படையினரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு வழங்கப்பட்டது.
புத்தர் சிலை வைக்கப்பட்டதையடுத்து மலையுச்சியில் பாரிய பௌத்த கொடி ஒன்று கட்டப்பட்டுள்ளது. அதனைவிட சிலையைச் சிற்றி பெருமளவு பௌத்த கொடிகள் கட்டப்பட்டுள்ளன.
இரவோடிரவாக இந்த சிலை வைக்கப்பட்டு பெருமளவு படையினரும் அதற்குப் பாதுகாப்பாக குவிக்கப்பட்டுள்ள நிலையில் இப்பகுதியிலுள்ள பூர்வீகக் குடிமக்களான தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் பெரும் பதற்றமும் அச்சமும் ஏற்பட்டிருக்கின்றது.
இந்திய வர்த்தக நிறுவனங்களுக்கான சிறப்புப் பொருளாதார வலையம் அமைப்பதற்கான இலங்கை – இந்திய ஒப்பந்ததம் கைச்சாத்திடப்பட்டு 24 மணி நேரத்தில் இந்தப் புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ளது