தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டில் காங்கிரஸ் ஏற்க முடியாத அளவுக்கு நிபந்தனைகளை விதிப்பதால் மத்திய அமைச்சரவையில் இருந்து தி.மு.க. விலகியதாக அறிவித்தது.
அதோடு பிரச்சனைகளின் அடிப்படையில் மட்டும் மத்திய அரசுக்கு ஆதரவு தருவது என்று தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக் குழுவில் கடந்த 6ஆம் தேதி முடிவு எடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து தி.மு.க. அமைச்சர்கள் இன்று டெல்லி சென்று பிரதமர் மன்மோகன் சிங்கை காலை 11 மணிக்கு சந்தித்து தங்களது ராஜினாமா கடிதங்களை கொடுக்க இருந்தனர்.
இந்த நிலையில் தி.மு.க. அமைச்சர்கள் மு.க.அழகிரி, தயாநிதிமாறன், நடிகர் நெப்போலியன், ஜெகத்ரட்சன், பழனிமாணிக்கம், காந்தி செல்வன் உள்பட 6 பேர் கொடுப்பதாக இருந்த விலகல் கடிதம் திடீரென மாலை 6.30 மணிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற கூட்டம் முடிந்த பிறகு பிரதமரை சந்தித்து மனு கொடுக்க தி.மு.க. அமைச்சர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.