Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

திட்டமிட்ட நிலப்பறிப்பு : சிங்கள மயமாகும் கிழக்கு

battiகிழக்கு மாகாணத்தில் திட்டமிட்ட வகையில் சிங்களவர்கள் தமிழ் பேசும் மக்களின் நிலங்களை அபகரித்து வருகின்றனர். கருணா குழுவினர் இதற்குத் துணை புரிவதாகவும், இது திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரியவருகிறது. கிழ்க்கு மாகாணத்தில் தமிழர்களின் காணிகளை குறைந்த விலைக்குச் சிங்களவர்களுக்கு விற்பனை செய்யுமாறு மிரட்டப்படுவதாகவும், காணிகளை வாங்கும் சிங்கள மக்களுக்கு அரச மானியத்தொகை வழங்கப்படுவதாகவும் கிழக்குப் பல்கலைக் கழகத்தைச் சார்ந்த ஒருவர் இனியொருவிற்குத் தெரிவித்தார்.

இதே வேளை, மாகாணத்தில் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் காணிகளை சிங்களவர்கள் அபகரிக்க முற்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் ஜனாதிபதியிடம் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, இவரது முறைப்பாடு குறித்து ஜனாதிபதி செயலகம் மாவட்ட அரசாங்க அதிபர்களிடம் விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் காணிகளில் சிங்களவர்கள் தாம் ஏற்கனவே வசித்ததாகக் கூறி, அபகரிக்க முற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் கடந்த மாதம் முறைப்பாடு செய்திருந்தார்.

இதனையடுத்து இது தொடர்பாக ஜனாதிபதி செயலக உதவிச் செயலாளர் அன்டன் பெரேரா, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரிகளிடம் இது தொடர்பான விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுள்ளார்.

குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதிக்கு தெரிவித்த முறைப்பாட்டின் பிரதியையும் மேற்படி அரசாங்க அதிபர்களுக்கு ஜனாதிபதியின் உதவிச் செயலாளர் அனுப்பி வைத்துள்ளார்.

Exit mobile version