“இனவாத பயங்கரவாதிகளை தோற்கடிப்பது என்றால் நாட்டு மக்கள் பக்குவப்படவேண்டும். மக்களின் பக்குவத்தன்மையே ஒரு தேசத்தின் அதிர்ஷ்டமாகும்.
இதேநேரம், பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் தாய் நாட்டின் சுதந்திரத்திற்காக சுமார் 24 ஆயிரம் படையினர் உயிர்த்தியாகம் செய்துள்ளதுடன், சுமார் 5,000 பேர் அங்க வீனர்களாகியுள்ளனர். எனவே இவ்வளவு அர்ப்பணிப்புகளுக்கு மத்தியில் இந்த வெற்றி பெறப்பட்டுள்ள நிலையில், நாட்டை பிளவுபடுத்த ஒருபோதும் இடமளிக்கப்படாது என்பதுடன், பிரிவினைவாதத்தின் நிழலுக்குக் கூட இனி எமது நாட்டில் இடங்கிடையாது.
இராணுவ வெற்றியைக் கௌரவிக்கும் முகமாக கொழும்பு காலி முகத்திடலில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற தேசிய வைபவத்தில் நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போதே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இவ்வாறு கூறினார்.
அவர் இங்கு மேலும் பேசுகையில்;
நாம் வழங்கும் தீர்வுகளிலும் இனவாத பிரிவினை வாதத்திற்கும் இடமளிக்கப்படமாட்டாது. ஒன்றுபடுத்தப்பட்ட நாட்டை மீண்டும் பிளவுபடுத்த முடியாத வகையிலும், பிராந்தியத்தின் அமைதிக்கு குந்தகம் ஏற்படாத வகையிலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய எமக்கே உரித்தான வேலைத்திட்டமொன்றுக்கு நாம் கூடிய விரைவில் செல்வோம்.
இதேநேரம், எமது தாய்நாட்டின் பாதுகாப்புக்காக வெளியுறவு நடவடிக்கைகளில் புதிய யுகமொன்றை ஆரம்பிக்கவேண்டியுள்ளது. தாய்நாட்டில் சுதந்திரத்தை வென்றெடுத்த நாம், அடுத்ததாக சர்வதேசத்தில் சுதந்திரத்தை வெற்றிகொள்ளவேண்டியுள்ளது.
அத்துடன், சுதந்திரத்திற்கான எமது இந்த வேலைத்திட்டத்தில் உலகின் பல அரசாங்கங்கள், எமது சுயாதீனத்தைப் புரிந்துகொண்டு உதவின. அந்த சகல நாடுகளிலுமிருந்தும் கிடைத்த ஆதரவுகளை நாம் மிகவும் மதிக்கிறோம்’ என்றார்.