Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தவறுகளை மூடி மறைக்கவே மத்திய அரசு தமிழகக் குழுவை இலங்கை அனுப்பியது! : நெடுமாறன்

இலங்கைத் தமிழர்களின் அவல நிலைக்குக் காரணமான மத்திய அரசின் தவறுகளை மூடி மறைக்கவே காங்கிரஸ் கூட்டணி எம்.பி.க்கள் குழு அங்கு அனுப்பப்பட்டுள்ளது என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து நேற்று திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில்,

“தமிழக முதல்வர் கருணாநிதிக்கு இலங்கை அதிபர் ராஜபக்ஷ தனிப்பட்ட அழைப்பு எதனையும் விடுக்கவில்லை. தமிழக முதல்வர் என்ற முறையில் பக்கத்து நாட்டு அதிபரால் அனுப்பப்பட்ட அழைப்பை அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதல்வர் பரிசீலித்திருக்க வேண்டும்.

இலங்கைத் தமிழர்களின் அவல நிலைக்குக் காரணமான மத்திய அரசின் தவறுகளை மூடி மறைக்க உதவும் வகையில் காங்கிரஸ் கூட்டணி எம்.பி.க்களை மட்டும் அங்கு அனுப்பியது தவறு என்பதை முதல்வர் கருணாநிதி உணர வேண்டும்.

தவறைத் திருத்திக் கொள்வதற்குப் பதிலாக மேலும் மேலும் தமிழக மக்களை ஏமாற்றும் முயற்சியில் முதல்வர் கருணாநிதி ஈடுபட்டிருப்பது கண்டனத்துக்குரியது.

‘தமிழகத்தில் நமக்குள்ளே மோதிக்கொண்டுதானே இலங்கைத் தமிழர்களிடையே சகோதர யுத்தத்துக்கு வழிவகுத்து, இன்றைய அவலநிலைக்கு ஆளாகியிருக்கிறோம் என்பதை இனியாவது சிந்திக்க வேண்டாமா?’ என்று எதிர்க்கட்சிகளுக்கு முதல்வர் கருணாநிதி அறிவுரை வழங்கினார்.

‘போர் நிறுத்தம் ஏற்படாவிட்டால் தமிழக எம்.பி.க்கள் அனைவரும் ராஜினாமா செய்வார்கள்’ என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைத் தன்னிச்சையாகக் கைவிட்டது யார் என்பதற்கு முதல்வர் பதில் கூறியே ஆக வேண்டும்” என்று நெடுமாறன் கேட்டுக் கொண்டுள்ளார்

Exit mobile version