Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தவறுகளையே இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஏனைய நாடுகளும் மீண்டும் இழைத்து வருவதாக சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு தெரிவித்துள்ளது..

இலங்கையில் போர் இடம்பெற்ற காலத்தில் இழைத்த தவறுகளையே இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஏனைய நாடுகளும் மீண்டும் இழைத்து வருவதாக சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு தெரிவித்துள்ளது.

வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்களைத் தடுப்பதற்கான முயற்சிகளை இந்நாடுகள் சிறிதளவாகவே மேற்கொண்டதாக குறிப்பிட்டுள்ள இவ்வமைப்பு, போர் வெற்றியின் பின்னர் அரசியல் மறுசீரமைப்பு மற்றும் நல்லிணக்க கொள்கைகள் தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் வாக்குறுதிகளில் இந்நாடுகள் நம்பிக்கை கொண்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளது.

மனிதகுலத்திற்கு எதிரான கொடூரங்களுக்கான பொறுப்பில் விடுதலைப் புலிகளின் பங்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் தொடர்ந்தும் புறக்கணிக்கும் நிலைமை தொடர்வதாகக் காணப்படுகிறது. அரசாங்கம் தனது கொள்கைகளைத் தொடர்ந்தும் கடைப்பிடித்து வந்தால் நல்லிணக்கமானது மேலும் நழுவிச் செல்வதாகவே அமையும். அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் தேவைப்படுகிறது.

2011இன் இறுதிக்குள் தனது பதிலளிக்கும் கடப்பாட்டை உறுதிப்படுத்த அரசாங்கத்தினால் முடியும் என்பதை வெளிப்படுத்தாதுவிடின் சர்வதேச விசாரணைக்கான ஏற்பாட்டை ஐ.நா.உறுப்பு நாடுகள் ஸ்தாபிப்பதற்கான பணியில் சுறுசுறுப்பாக ஈடுபட வேண்டும் என்று சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு தெரிவித்துள்ளது.

சிறுபான்மையினரின் துன்பங்கள் அதிகரித்து செல்வது தொடர்பாக கொள்கைகளை உடனடியாக இலங்கை அரசாங்கம் மீளாய்வு செய்யவேண்டும்.
அவசரகால நிலைமையை முடிபுக்கு கொண்டுவந்து சர்வதேச சட்டத்திற்கு அமைவாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை மீளாய்வு செய்ய வேண்டும். விடுதலைப் புலிகளுடன் சம்பந்தப்பட்டிருந்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருப்போரின் பெயர்கள், இடங்களை குடும்ப உறுப்பினர்களுக்கு கிடைக்கச் செய்தல் வேண்டும்.
மோதலில் கொல்லப்பட்ட அல்லது காணாமல் போனோர் தொடர்பாக மரணச் சான்றிதழ்கள் அல்லது காணாமல் போன சான்றிதழ்களை வழங்கவேண்டும்.
இறந்தவர்கள் தொடர்பாக பகிரங்கமாக துக்கத்தை அனுஷ்டிக்க பொதுமக்களுக்கு அனுமதியளிக்க வேண்டும்.
நினைவுச் சின்னங்களை அமைக்கவும் எஞ்சிய உடற்பாகங்களை கண்டுபிடிக்க உதவவேண்டும் போன்ற பரிந்துரைகளையும் அந்த அமைப்பு கேட்டுள்ளது.

Exit mobile version