Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தலித் மக்கள் அனுபவிக்கும் கொடுமைகளுக்கு தமிழக அரசே பொறுப்பு.

உத்தபுரத்தில் தங்கள் மீதான சாதீய கொடுமைகளுக்கு எதிராக தலித் மக்கள் போராடிவருகின்றன. ஆனால் மாவட்ட அரசு நிர்வாகமும் போலீசும் ஆதிக்க சாதிகளுக்கு ஆதரவாக இருக்கிறது. இந்நிலையில் உத்தபுரத்தில் தொடர்ந்து தலித் மக்கள் அனுபவிக்கும் அனைத்துக் கொடுமைகளுக்கும் தமிழக அரசு முழு பொறுப்பேற்க வேண்டும் என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் கே. பாலபாரதி. மணப்பாறை ஒன்றியம், பன்னாங்கொம்பில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற அகில இந்திய விவசாய சங்க மாநாட்டிற்கு நிதி அளிக்கும் பொதுக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது: தமிழகம் முழுவதும் 2 ஏக்கர் நிலம் மற்றும் வீட்டு மனைப் பட்டா கேட்டு விண்ணப்பித்த அனைத்து ஏழை, எளிய மக்களையும் அலைக்கழிப்பது அவசியமற்றது. விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருளுக்கு உரிய விலை கொடுப்பதிலும் அரசு தடுமாறுகிறது. ஏழை மக்கள் பாதிக்கும் வகையில் அடிக்கடி பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையைப் பலமடங்கு உயர்த்துவது மத்திய அரசின் நிர்வாகத் திறமையின்மையை வெளிப்படுத்துகிறது. மாநிலம் முழுவதும் சமத்துவபுரங்கள் உருவாகின்றனவே தவிர, மக்கள் உண்மையான சமத்துவத்தை அனுபவிக்க முடியாமல் தடுமாறும் நிலை இருப்பதை உத்தபுரம் உணர்த்துகிறது. உத்தபுரத்தில் எழுப்பிய தீண்டாமை தடுப்புச் சுவரை உடைத்தது மட்டுமன்றி, இன்றளவும் அவர்களது அடிப்படை பிரச்னைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது காவல் துறை தாக்குதல் நடத்தியது கண்டனத்திற்குரியது. இதுபோன்ற அடக்குமுறைகளால் கம்யூனிஸ்ட்களை ஒடுக்க முடியாது. தொடர்ந்து இந்த பிரச்னையில் அரசு மெத்தனம் காட்டாமல் சமத்துவ உரிமையை வழங்க வேண்டும். சாதி, மத மோதல்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்க அனைத்துப் பொது அமைப்புகளும் முன்வர வேண்டும் என்றார் பாலபாரதி.

Exit mobile version