Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தலித் பெண்கள் பெயரில் நிலம் வழங்குக!

 தமிழக அரசு அறிவித்துள்ள இரண்டு ஏக்கர் நிலம் தாமதமின்றி வழங்கப்பட்டு, அதில் தலித் குடும்பங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதோடு, அந்த நிலத்தை பெண்கள் பெயரில் வழங்க வேண்டும் என்று ஈரோட்டில் நடை பெற்ற தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலித் பெண்கள் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

தாழ்த்தப்பட்ட மக்கள் சாதிப் பேரைச் சொல்லி ஏளனப்படுத்தப்படுவதும், அவமானப்படுத்தப்படுவதும் ஒருபக்கம் என்றால், அதில் தலித் பெண்கள் படும் அவலங்களைச் சொல்ல வார்த்தைகளே இல்லை. பஞ்சாயத்து தலைவ ராகவே இருந்தாலும் தலித் பெண் என்றால் ஒத்துழையாமையும், கூடுதலாக பாலியல் தாக்குதல்களையும் சமாளிக்க வேண்டிய சூழலே இன்றும் நிலவி வருகிறது. இதுபோன்ற கொடுமைகளை எதிர் கொள்ள தலித் பெண்களை அணிதிரட்டும் வகையில் இந்த மாநாடு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியால் நடத்தப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை (மார்ச் 23-ம்தேதி) காலை ஈரோடு பஸ் நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்ற இம் மாநாட்டை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்பாளர் பி. சம்பத் துவக்கி வைத்து உரையாற்றினார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் ஈரோடு தாலுகா தலைவர் பேபி என்கிற நர்மதா தலைமை வகித்தார். சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.அமிர்தம் வாழ்த்திப் பேசினார்.ஈரோடு, கோவை, திருப்பூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, மதுரை மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 9 மாவட்டங்களில் இருந்து வந்திருந்த தலித் பெண் பிரதிநிதிகள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் பொன்னுத்தாய் தீர்மானங்களை முன்மொழிந்தார்.

இம்மாநாட்டில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் நடைமுறையை உறுதி செய்வதற்கான மாநில, மாவட்ட கண்காணிப்புக் குழுக்கள், சட்ட ரீதியாக அமைக்கப்படவும், செயல் படவும் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும். தமிழக அரசு அறிவித்துள்ள 2 ஏக்கர் நிலம் தாமதமின்றி வழங்கவும் தலித் குடும்பங்களுக்கு முன்னுரிமை தரவும், பெண்கள் பெயரில் நிலம் வழங்குவதை தொடரவும் ஏற்பாடு செய்ய வேண்டும். தலித் மக்களுக்கான சிறப்பு உட்கூறு திட்டத்தில் கொண்டு வரும் நிதியை மாநில அரசு திட்டமிட்டு முழுமையாக பயன்படுத்த வேண்டும். பெண்கள் அதிகம் வேலை பார்க்கும் துப்புரவு துறையில் பெண்களுக்கு காலை நேரப்பணி வழங்கு வதை மாற்ற வேண்டும். அடிப்படை வசதி கூட இல்லாமல் தலித் மக்கள் வசித்து வரும் பகுதிகளில் முறையான கழிப்பறை, குடிதண்ணீர், சாலை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி தரப்பட வேண்டும். நூறுநாள் வேலை திட்டத்தில் நாட்களையும், கூலியையும் உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பொதுச் செயலாளர் உ. வாசுகி நிறைவுரையாற்றினார். ஈரோடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் எஸ். சரோஜா நன்றி கூறினார்.

இம்மாநாட்டில் 200-க்கும் மேற்பட்ட தலித் பெண்கள் கலந்து கொண்டனர்

Exit mobile version