தலாய் லாமாவுக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கும் இடையில் நடைபெறவுள்ள சந்திப்பு குறித்துச் சீன அரசு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ள நிலையிலும் இச்சந்திப்புக் குறித்து ஒபாமா உறுதியாக உள்ளார்.மேலும், இச்சந்திப்புக் குறித்த திகதி இதுவரை தீர்மானிக்கப்படவில்லை. ஆனால் இம்மாத இறுதியில் வெள்ளை மாளிகையில் இச்சந்திப்பு நடைபெறுமென வெள்ளை மாளிகையின் ஊடகப் பேச்சாளர் பில் பர்டன் தெரிவித்துள்ளார்.
இச்சந்திப்பு நடைபெற்றால் அமெரிக்கசீன உறவு கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகுமெனச் சீனா எச்சரித்துள்ள நிலையில் வெள்ளை மாளிகையிலிருந்து இந்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
சீனாவுக்கான கடந்த வருட விஜயத்தின் போது தலாய் லாமாவை சந்திக்கவுள்ளதாகச் சீனத் தலைவர்களிடம் ஒபாமா கூறியிருந்தார். தலாய் லாமா சர்வதேச ரீதியில் மதிப்பளிக்கப்படும் ஒரு மாத மற்றும் கலாசாரத் தலைவர் அந்த வகையில் அவரைச் சந்திப்பதில் ஒபாமா ஆர்வத்துடனும் உறுதியுடனும் உள்ளாரெனவும் வெள்ளை மாளிகையின் பேச்சாளர் கூறியுள்ளார்.
இதேவேளை, ஒபாமா தலாய் லாமா சந்திப்பு இரு நாடுகளுக்குமிடையிலான ஒத்துழைப்பு மற்றும் நம்பிக்கைக்கு அச்சுறுத்தலாக இருக்குமென கம்யூனிஸ கட்சியின் உயரதிகாரி ஹு வெய்கன் எச்சரித்துள்ளார்.தாய்வானுக்கான ஆயுத விநியோகம் குறித்து அமெரிக்காவுடனான உறவில் சீனா தயக்கம் காட்டிவரும் நிலையில் இச்சந்திப்பு மேலும் குழப்பத்தை தோற்றுவித்துள்ளது.