Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தற்கொலைகளாக ஆக்கப்பட்ட கொலைகள்:அமெரிக்க ராணுவ சித்தரவதைகள் அம்பலமாகின்றன!

  “அது ஜூன் 9இ 2006 இரவு. மூன்று கைதிகளை அவர்களது அறைகளிலிருந்து முகாமின் வேறொரு இடத்திற்குக் கொண்டு சென்றார்கள். அவர்களை ஏற்றிச்சென்ற வாகனம் திரும்பி வந்தபோது ஏதோவொன்றை வாகனத்தில் வந்தவர்கள் ஒப்படைத்துக் கொண்டிருந்தார்கள். சில நிமிடங்கள் கழித்து முகாம் முழுவதும் கூச்சலும்இ குழப்பமுமாக இருந்தது. என தருகில் வந்த நர்சைப் பார்த்துக்கேட்டேன். அங்கே என்ன நடக்கிறது என்று. இறந்துபோன மூன்று கைதிகளின் உடல்களை மருத்துவமனையில் தந்தார்கள். அந்த உடல்களில் ஒன்றில் கடுமையாகத் தாக்கப்பட்டதற்கான காயங்களும் இருந்தன” – அன்றைய தினம் குவாண்டனாமோ சிறை முகாமில் காவலுக்கு இருந்த அதிகாரிகளில் ஒருவரான ஜோ ஹிக்மேன்தான் இதைக் கூறியவர்.

அன்றைய தினம் காவல்பணியில் ஈடுபட்டிருந்த வேறு மூன்று அதிகாரிகளும் இதுபோன்று தெரிவித்துள்ளனர். ஆனால் இறந்தவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்று கோப்புகளை அமெரிக்க ராணுவம் மூடியிருந்தது. சுமார் நான்கு ஆண்டுகளுக்குப்பிறகு இந்த ராணுவ அதிகாரிகளின் பேச்சு அதை அம்பலப்படுத்தியுள்ளது. அமெரிக்க ராணுவத்தின் அப்போதைய பேச்சை வேறு வழியின்றி நம்பிய கைதிகளின் உறவினர்கள் மீண்டும் நீதிமன்றங்களின் கதவுகளைத் தட்டிக் கொண்டிருக்கின்றனர். தற்கொலைகள் பற்றிய உண்மைகள் எங்களுக்குத் தெரிந்தே ஆக வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள். வாஷிங்டனில் உள்ள மத்திய நீதிமன்றத்தைதான் அவர்கள் அணுகியுள்ளார்கள்.

அந்த மூன்று நபர்களில் சவூதி அரேபியாவைச் சேர்ந்த 22 வயது நிரம்பிய யாசர் அல் ஜஹ்ரானி மற்றும் ஏமன் நாட்டைச் சேர்ந்த 33 வயது நிரம்பிய சலா அல் சலாமி ஆகிய இருவரும் அடங்குவர். இவர்கள் சித்ரவதை செய்யப்பட்டு , அதனால் உயிரிழந்திருக்க வேண்டும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த குவாண்டனாமோ முகாமில் சித்ரவதை நடப்பது ஊரறிந்த ரகசியம். இரவு நேரத்தில் ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கொருமுறை கைதிகள் எழுப்பி விடப்படுவார்கள். அவர்களைத் தூங்கவிடாமல் சித்ரவதை பண்ணுவதில் துவங்கும் இந்த கொடூரங்கள் பல்வேறு வடிவங்களை எடுத்து பல சமயங்களில் கொலைகளுக்கும் இட்டுச்செல்கிறது. இவைதான் தற்கொலைச் செய்திகளாக வெளி உலகத்திற்கு அறிவிக்கப்படுகின்றன.குவாண்டனாமோ சிறைகளில் மட்டு மல்ல , அமெரிக்க நாட்டின் மண்ணிலுள்ள சிறைகளிலும் வெளிநாடுகளைச் சேர்ந்த வர்களின் நிலைமை மோசமாகவே உள்ளது. அங்கும் சித்ரவதைகளுக்குப் பஞ்சமே கிடையாது. சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான பிரிட்டன் திரைப்படம் ஒன்றில் , புளோரிடாஇ டெக்சாஸ் , அரிசோனா மற்றும் கலிபோர்னியா ஆகிய இடங்களில் உள்ள சிறைகளில் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு கேமராக்களில் படமானவற்றையும் இணைத்திருந்தார்கள். கடுமையான ஆயுதங்களைக் கொண்டு கைதிகள் தாக்கப்படும் கொடுமைகள் அந்தக் கேமராக்களில் பதிவாகியிருந்தன. சில கைதிகள் கொலை செய்யப்படுவதும் அம்பலமானது.

அமெரிக்கச் சிறைகளில் இருப்பவர்களில் சுமார் 2 லட்சத்து 83 ஆயிரம் பேர் மனநோயாளிகளாக இருக்கிறார்கள். நாடு முழுவதும் மனநோய்க்காக சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையை விட இது நான்கு மடங்கு அதிகமாகும். பாலியல் ரீதியாக தாக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் கணிசமானதாகும். அதுமட்டுமில்லாமல்  14 வயது முதல் 18 வயதுள்ளவர்களையும் வயது வந்தவர்களைப் போலவேதான் அமெரிக்காவில் நடத்துகிறார்கள். இந்த நடைமுறை தவறு என்று தெரிந்தும் அதை விடாப்பிடியாக அமெரிக்கக் காவல்துறையும்  நீதித்துறையும் பிடித்துக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு தவறாக வழக்குத் தொடுக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கையோ சுமார் இரண்டு லட்சத்தைத் தொடுகிறது. 50 அமெரிக்க மாகாணங்களில் 40 மாகாண நீதிமன்றங்கள் இத்தகைய தவறான நடைமுறையைப் பின்பற்றிக் கொண்டிருக்கின்றன.

நோயால் சிரமப்படுபவர்களுக்கு போதிய மருத்துவ வசதிகளையும் அமெரிக்க சிறைத்துறை செய்வதில்லை. கலிபோர்னியா சிறையில் 2006 ஆம் ஆண்டு 426 கைதிகள் மரணமடைந்தனர். அவற்றில் சுமார் 64 பேரைக் காப்பாற்றியிருக்க முடியும் என்று லாஸ் ஏஞ்சல்ஸ் பத்திரிகை குறிப்பிட்டது. 41 வயதான நீரிழிவு நோயாளியான ராமோஸ் என்பவருக்கு மருந்தே கொடுக்காமல் விட்டுவிட்டார்கள். சித்ரவதைகள் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் குழுவின் தலைவரான மான்பிரெட் நோவக் வெளிப்படையாகவே பேசுகிறார். மனித உரிமைகளைக் கண்டுபிடித்த நாடு என்று சொல்லிக்கொள்ளும் அமெரிக்கா கொடூரமான சித்ரவதைகளைக் கையாள்கிறது என்பது உலகத்திற்கே தெரியும் என்று உண்மையைப் போட்டு உடைக்கிறார்.

தற்கொலை செய்ததாகக் கூறும் கைதிகள் விவகாரத்தில் மேலும் சில உண்மைகள் அம்பலமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version