Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தருமபுரி பேருந்து எரிப்பு மூவருக்கு தூக்குத் தண்டனை உறுதி.

மக்கள் விரோத கருணாநிதி ஜெயலலிதா ஆட்சிக்காலங்களில் இவர்கள் சொந்தப் பகைகளின் காரணமாக அப்பாவிகள் கொல்லப்படுவது வழக்கம். ஊழல் வழக்கு ஒன்றில் ஜெயலலிதாவுக்கு எதிராக தீர்ப்பு ஒன்று வர அது தொடர்பாக நடந்த போராட்டங்களில் அப்பாவி கல்லூரி மாணவிகள் மூவர் தருமபுரியில் எரித்துக் கொல்லப்பட்டனர். அது போல கருணாநிதியின் குடும்பத்தில் வந்த பிரச்சனையில் எழுந்த கலவரத்தில் மதுரை தினகரன் அலுவலக ஊழியர்கள் 3 பேர் தீவைத்துக் கொளுத்தப்பட்டனர். அந்த மூவரையும் கொன்றவர்களை ஆறு மாத காலத்திற்குள் வழக்கிலுருந்து விடுதலை செய்ததோடு கொலைக்கு காரணமாக அழகிரிக்கு மத்திய அமைச்சர் பதவி பெற்றுக் கொடுத்ததோடு கொலையில் நேரடிப் பங்காளிகளான அட்டாக் பாண்டி உள்ளிட்டோருக்கு மதுரையில் விவசாய சங்க வாரியப்பதவி வழங்கப்பட்டது. ஜெயலலிதாவின் தொண்டர்கள் தவறு செய்தால் மாட்டிக் கொள்கிற அதே நேரம் எத்தனை கொலை செய்தாலும் ஊழல் செய்தாலும் கருணா மட்டும் எப்போதும் மாட்டிக் கொள்ளவே மாட்டார் என்பது மீண்டும் ஒரு முறை தமிழகத்தில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2000ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ந் தேதி கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கில், அதிமுக பொதுச்செயலாளரும், அப்போதைய முதல்வரும் ஜெயலலிதாவுக்கு தண்டனை விதித்து கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து பல இடங்களில் .தி.மு..வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.அந்த சமயத்தில் தர்மபுரிக்கு சுற்றுலா வந்த கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக பேருந்து, தர்மபுரி அருகே உள்ள இலக்கியம்பட்டியில் தீவைத்து எரிக்கப்பட்டது.இதில் கோகிலவாணி, காயத்திரி, ஹேமலதா ஆகிய 3 மாணவிகள் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர்.இதுதொடர்பாக .தி.மு..வினர் 31 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை சேலம் முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டு நீதிபதி கிருஷ்ணராஜா விசாரித்தார். வழக்கு விசாரணையின் போது தர்மபுரி மாவட்ட கலெக்டர், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணை வேந்தர் உள்பட 123 பேர் சாட்சியம் அளித்தனர்.இந்த வழக்கில், தர்மபுரி நகர .தி.மு.. செயலாளர் நெடு என்ற நெடுஞ்செழியன், முன்னாள் எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் மாது என்ற ரவீந்திரன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் முனியப்பன் ஆகிய 3 பேருக்கு தூக்கு தண்டனையும் தலா ரூ.59 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். மேலும் 25 பேருக்கு பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் தனித்தனியாக சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதன்படி அவர்கள் 25 பேரும் தலா 7 ஆண்டு 3 மாதம் ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.2 பேர் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த போதே ஒருவர் விபத்தில் மரணம் அடைந்தார்.இந்த தீர்ப்பை எதிர்த்து அவர்கள் 28 பேரும் சென்னை ஐகோர்ட்டில் அப்பீல் செய்தனர்.இதில் 3 பேரின் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. மற்ற 25 பேரும் தனித்தனியாக சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பதை மாற்றி, ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனால் அவர்கள் அதிகபட்சமாக 2 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்தால் போதும் என்ற நிலை ஏற்பட்டது. இந்த தீர்ப்பு கடந்த 2007ம் ஆண்டு டிசம்பர் 6ந் தேதி கூறப்பட்டது.ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து, தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்ட நெடு என்ற நெடுஞ்செழியன், மாது என்ற ரவீந்திரன், முனியப்பன் ஆகிய 3 பேரும், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் 30.08.2010 (திங்கள்கிழமை) அன்று தீர்ப்பு கூறினார்கள். தீர்ப்பில், தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் 3 பேருக்கு தூக்கு தண்டனை உறுதியானது. நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகியோரின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். இந்த சம்பவம் சமூகத்துக்கு எதிரான காட்டுமிரண்டித்தனமான கொடூர செயல். இதுபோன்ற செயல்கள் இனி நடக்கக் கூடாது. அப்பாவி மாணவிகளை படுகொலை செய்தது கொடூரமானது. இந்த வழக்கில் ஏற்கனவே அளித்த தூக்கு தண்டனை நியாயமானதுதே என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version