தருமபுரி தாக்குதல் சம்பவம் குறித்த இலயோலா கல்லூரி மாணவர்களின் கள ஆய்வுக் குழுவின் அறிக்கை -20.112012.
எமது ஆய்வுக்குழுவின் ஆய்வறிக்கை:
தருமபுரி மாவட்டம், தருமபுரி ஒன்றியம் தருமபுரி-திருப்பத்தூர் நெடுஞ்சாலையில் உள்ள வெள்ளாளப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் நாயக்கன் கொட்டாய். தலித் மக்களின் இருப்பிடமான அண்ணா நகர் காலனி, கொண்டம்பட்டி, செங்கல் மேடு ஆகிய கிராமங்களை சுற்றி வன்னியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் நாயக்கன் கொட்டாய் உள்ளிட்ட 20-க்கும் மேற்ப்பட்ட கிராமங்கள் அமைந்துள்ளன. இப்பகுதியில் வாழும் தலித் மக்கள் பெங்களூர், கோவை போன்ற நகரங்களுக்கு சென்று கட்டிட வேலை, கொத்தனார் வேலை மற்றும் உடலுழைப்பு செய்யும் அமைப்பு சார தொழிலாளர்கள்.
நீண்ட நாட்களாக வறுமையில் உழலும் வன்னியர்களின் அறியாமை மற்றும் ஏழ்மையை தனது குடும்ப அரசியலுக்கு இரையாக்கிக் கொள்ளும் தந்திரத்தை ராமதாஸ் கடைபிடித்து வருகிறார். சமீபகாலமாக பா.ம.க.வின் அரசியல் செல்வாக்கு மேற்கண்ட காரணத்தால் சரிந்துவிட்டது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் வன்னியர் வாக்கு வங்கி பலவாறாக சிதைவுற்றதால் தே.மு.தி.க. போன்ற கட்சிகள் வட தமிழகத்தில் காலூன்ற முடிந்தது. மேலும் பா.ம.க. இரண்டாக உடைந்ததும் இதற்கு தக்கச் சான்றாகும். எனவே அனைத்து கட்சிகளிலும் இருக்கும் வன்னியர்களை ஒன்று திரட்ட ராமதாஸின் கடந்தகால உத்தியான சேரிகளைக் கொளுத்துதல், வன்னியர்களைக் கொண்டு சேரி மக்களின் சொத்துகளை கொள்ளையிடுதல் போன்றவற்றை மறுபடியும் துவக்கியுள்ளார். அந்த சூட்சமமே தற்போது நிகழ்ந்த வன்முறைத் தாக்குதலாகும்.
வன்முறை மற்றும் வன்கொடுமையின் மொத்த உருவமான காடுவெட்டி குருவை கொண்டு வடதமிழகத்தின் சேரிகளைக் கொளுத்தி அரசியல் குளிர்காய நினைக்கிறார். ராமதாஸின் வஞ்சக வலையில் விழுந்த வன்னிய சாதி வெறியினர் ஆடிய வன்முறை வெறியாட்டமே தர்மபுரி தாக்குதல் சம்பவம்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நத்தம் காலனி, அண்ணா நகர், செங்கல்மேடு, கொண்டம்பட்டி ஆகிய கிராமங்களில் நிகழ்ந்த சாதிவெறி செயல்கள், ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் தலித் மக்களுக்கெதிரான வன்முறை சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நடப்பதை மீண்டும் உறுதிபடுத்தியுள்ளது.
கலவரத்தின் துவக்கம்:
தருமபுரி மாவட்டம் நத்தம் காலனியை சேர்ந்த இளவரசன் என்ற தலித் இளைஞரும், செல்லன்கொட்டாய் கிராமத்தை சார்ந்த திவ்யா என்ற வன்னிய சாதிப் பெண்ணும் நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். பெண் வீட்டாரின் கடும் எதிர்ப்பையும் மீறி காவல்துறை அதிகாரிகளின் முன்னிலையில் இருவரும் 14.10.2012 அன்று சாதிமறுப்பு பதிவுத் திருமணம் செய்துகொண்டனர். (இளவரசன், காவல் ஆய்வாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.) இது ஆதிக்கச் சாதி வன்னியர்களுக்குப் பிடிக்காததால், இளவரசன்-திவ்யா தம்பதியினருக்கும் இவர்களின் குடும்பத்தாருக்கும் நெருக்கடி கொடுத்து வந்தனர். எனவே இருவரும் காவல்துறையிடம் பாதுகாப்பு கோரியிருந்தனர். இதற்கிடையே வன்னியர்கள் ஊர் பஞ்சாயத்தைக் கூட்டி, அவர்கள் இருவரையும் 7.11.2012-க்குள் பஞ்சாயத்திடம் ஒப்படைக்கும்படியும், இல்லாவிட்டால் இரண்டு குடும்பங்களையும் வாழ விடமாட்டோம் என்றும் எச்சரித்துள்ளனர். உறவினர்களின் தொடர் நெருக்கடியின் காரணமாக, திவ்யாவின் தந்தை நாகராஜ் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இம்மரணம் தற்கொலை தானா? என்பதை சி.பி.ஐ. போன்ற அமைப்புகள் விசாரிப்பதன் வாயிலாகவே உண்மை தெரியவரும்.
நாகராஜின் மரணத்தை காரணமாகக் கொண்டு தலித் மக்களின் குடியிருப்புக்களை சூறையாட திட்டமிட்ட வன்முறைக் கும்பல், பெட்ரோல் குண்டு, கடப்பாரை, உருட்டுக்கட்டை, சமட்டி, தீப்பந்தம் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களோடு சேரிகளில் நுழைந்தனர். முதலில் நாகராஜின் பிரேதத்தைத் தூக்கிக் கொண்டு நத்தம் காலனி நோக்கிப் படையெடுத்தனர். 250-க்கும் மேற்பட்ட தலித் குடும்பங்கள் வாழும் இக்கிராமத்தில் தான் முதல் தாக்குதல் நிகழ்ந்திருக்கிறது. நாகராஜின் பிரேதத்தை இளவரசனின் வீட்டுக்கு அருகில் வைத்துவிட்டு கலவரத்தைத் துவக்கியிருக்கிறார்கள். நத்தம் காலனியில் ஒரு வன்முறைக் கும்பல் இளவரசனின் வீட்டை தீவைத்து எரிக்க, மேற்கண்ட பயங்கரமான ஆயுதங்களோடு வந்த மற்றொரு கும்பல் நத்தம் காலனியின் பல்வேறு பகுதிகளுக்குள் புகுந்து தலித் மக்களின் வீடுகளில் பெட்ரோல் ஊற்றி தீக்கிரையாக்கி “வீடுகளில் உள்ள கட்டில், அலமாரி(பீரோ) உள்ளிட்டவற்றை உடைத்துவிட்டு, வீடுகளில் வைத்திருந்த பெருமளவிலான பணத்தையும், நகைகளையும் கொள்ளையடித்து சென்றனர். இதே மாதிரியான வன்முறை சம்பவத்தை அருகிலிருந்த அண்ணா நகர், கொண்டம்பட்டி மற்றும் செங்கல்மேடு கிராமங்களிலும் கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.
தலித் மக்கள் மீதான தாக்குதலை நடத்திய வன்னிய கிராமங்கள்:
நாயக்கன்கொட்டாய்
செல்லான்கொட்டாய்
புதுக்குடியான்கொட்டாய்
வாணியம்பாடியான்கொட்டாய்
கதிர்நாயக்கனஅள்ளி
புளியம்பட்டி
வெள்ளாளப்பட்டி
சீராம்பட்டி
குப்பூர்
திம்பம்பட்டி
கிருஷ்ணாபுரம்
சவுக்குத்தோப்பு
கொட்டாவூர்
கம்மையநல்லூர்
கோனையம்பட்டி
சவுலுப்பட்டி
ஆண்டிப்பட்டி
மத்தன்கொட்டாய்
மொளகானூர்
மாரவாடிப்பழையூர்
குரும்பட்டி
வன்னியக்குளம்
குண்டலப்பட்டி
செங்கல்மேடு
கொண்டம்பட்டி
கொல்லம்பட்டி
செம்மாந்தகுப்பம்
கங்குரச்சட்டிபட்டி
செட்டியூர்
காவல்துறையை வன்முறை நடந்த பகுதிக்குள் நுழைய விடாமல் தடுத்த கிராமங்கள்:
மதிகோன்பாளையம்
எஸ்.கொட்டாவூர்
பின்னணிகள்:
ஆண்டாண்டுகாலமாய் சாதிய அடக்குமுறைகளால் சமூகத் தளத்திலும் பொருளாதாரத் தளத்திலும் மிகவும் பின் தள்ளப்பட்டு கூனிக் குறுகி வாழ்ந்து வந்த தலித் மக்கள், சாதி ஒழிப்பு ஒன்றுதான் சமூக விடுதலைக்கான அங்கீகாரம் என்ற அடிப்படையில் பொருளாதார முன்னேற்றமும், சாதிமறுப்புத் திருமணங்களும் அவசியம் என்பதை உணர்ந்து, பொருளாதார சுயமரியாதையுடன் தன்மானமிக்க வாழ்க்கையை வாழத் தொடங்கினர். ஆனால் சமூகத் தளத்தில் சமநீதியை விரும்பாத ஆதிக்கச் சாதி வெறியர்களுக்கு தலித் மக்களின் இத்தகைய முன்னேற்றம் ஒருவிதமான பொறாமையை உருவாக்கியது. அதே வேளையில் தலித் மக்களின் முன்னேற்றமானது அவர்களின் பொருளாதார வளர்ச்சியிலும், சுயமரியாதையிலும் தான் இருக்கின்றது என்பதை உணர்ந்த ஆதிக்கச் சாதி வெறியர்கள், தலித் மக்களின் முன்னேற்றத்தைத் தடுக்க முதலில் அவர்களின் பொருளாதாரத்தின் மீது கை வைக்கத் தொடங்கினர். இதன் அடிப்படையில் தான் தற்போது தருமபுரி மாவட்டத்தில் தலித் மக்களுக்கு எதிரான வன்முறைச் சாதிவெறியாட்டம் நிகழ்த்தப்பட்டுள்ளது.
மேலும் இத்தாக்குதலின் பின்னணிகளை ஆராயும்போது, கலவரத்திற்கு அரசியல் பின்புலம் உள்ளது உறுதிப்படுகிறது. வன்னியர்களின் சாதி உணர்ச்சியை கூர்மைப் படுத்தவும், ஓட்டு வங்கியை தக்கவைக்கவும் பா.ம.க.-வால் ஆண்டுதோறும் சித்திரா பௌர்ணமி விழா கொண்டாடப்படுகிறது. கடந்த சித்திரா பௌர்ணமி அன்று நடந்த வன்னியர் இளைஞர் பெருவிழாவில் பா.ம.க. நிறுவனர் இராமதாஸ் முன்னிலையில் வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு, “வன்னியர் பெண்களை காதல் திருமணம் புரியும் பிற சாதியினரை வெட்ட வேண்டும். அதற்கு கட்சி துணை நிற்கும்” என்று பேசியிருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல், சம்பவம் நடப்பதற்கு கிட்டத்தட்ட ஒரு மாதங்களுக்கு முன்பாக தருமபுரியில் உள்ள வன்னியர் திருமண மண்டபத்தில் பா.ம.க. கட்சிக்கூட்டம் கூட்டப்பட்ட போதும் இதே கருத்தையே அவர் மீண்டும் முன்வைத்திருக்கிறார். சாதிய உணர்வைத் தூண்டும் இத்தகைய பேச்சுதான் இதுபோன்ற வன்கொடுமை தாக்குதல்களுக்கு அடிப்படை காரணம். வன்முறை மற்றும் சாதி வெறியைத் தூண்டிய குற்றங்களுக்காக அவர் கைது செய்யபட்டிருக்க வேண்டும். மேலும் சமூக பயங்கரவாதத்தை தூண்டும் வன்னியர் சங்கத்தின் மீது அரசும், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள பா.ம.க. மீது தேர்தல் ஆணையமும் சட்டப்படி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
இதுபோன்ற சாதி வெறியைத் தூண்டும் பேச்சு வன்னியர்களுக்கு உந்துதலைத் தந்ததோடு, சாதி மறுப்புத் திருமணத்திற்கு எதிராக வன்னியரைத் தூண்டிவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவேதான் நத்தம் காலனி, அண்ணா நகர், செங்கல்மேடு, கொண்டம்பட்டி ஆகிய கிராமங்களில் நடந்த தாக்குதலில் 20-க்கும் மேற்பட்ட(பட்டியல் மேலே கொடுக்கப்பட்டுள்ளது) கிராமத்தைச் சேர்ந்த வன்னியர்கள் 2000 பேர் ஈடுபட்டுள்ளனர். இக்கலவரத்தை தருமபுரி மாவட்ட பா.ம.க. இளைஞரணி தலைவர் மதியழகன், வெள்ளாளப்பட்டி ராஜா, எஸ்.கொட்டாவூர் மாது, சின்னச்சாமி, டீக்கடை கிருஷ்ணன், கொண்டம்பட்டி மணி மற்றும் உள்ளூர் பா.ம.க. நிர்வாகிகளும் வன்னியர் சங்க நிர்வாகிகளும் தலைமை தாங்கி நடத்தி உள்ளதை கள ஆய்வில் உறுதிப்படுத்த முடிகிறது.
மேலும் மேற்கூறியபடி வன்னிய சாதியனரின் சாதிய வன்கொடுமைகளுக்கு அடிபடாமல் சுயமரியாதை வாழ்வு மேற்கொண்டு வாழ்ந்து வந்த தலித் மக்களின் பொருளாதார வளர்ச்சியை சகித்துக்கொள்ள முடியாமல், இம்மக்களின் மீது பொருளாதார சீரழிவை திட்டமிட்டு நடத்தியிருக்கிறார்கள். தலித்துகளின் பொருளாதாரத்தை நிலைகுலையச் செய்து விட்டால், அவர்களை மீண்டும் சாதிய கட்டமைப்பிற்கு உட்படுத்தி விடலாம் என்பது தான் வன்னியர்களின் நோக்கம் ஆகும். எனவே தான், இந்த வன்முறை தாக்குதலில் நத்தம் கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளும் சூறையாடப்பட்டும், தீக்கிரையாக்கப்பட்டும் உள்ளன.
அண்ணா நகர் கிராமத்தில் இருந்த 56 வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன. கொண்டம்பட்டியில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன. சாதிமறுப்பு திருமணத்திற்கெதிரான வன்மத்தை வன்னியர்கள் தொடர்ந்து அரங்கேற்றி வருகின்றனர். கடந்த 2003ஆம் ஆண்டு ஜூலை மாதம் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகிலுள்ள புதுக்கூரைப்பேட்டை என்னும் கிராமத்தில் வன்னிய சாதிக் கட்டுப்பட்டை மீறி காதலித்த வன்னியப் பெண்ணான கண்ணகியையும், தலித் சமுகத்தைச் சார்ந்த முருகேசனையும், வன்னியர்கள் கொடூரமாகக் கொலை செய்தனர். வன்னியர்களின் இக்கொடூரச் செயலுக்குப் பாட்டாளி மக்கள் கட்சியின் ஆதரவு இருந்தது. கொங்கு வேளாளப் பேரவை, பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் தேவர் கூட்டமைப்பு ஆகியவை தெடர்ந்து சாதிமறுப்புத் திருமணங்களை எதிர்த்து வருவது அரசியல் சாசனத்திற்கு எதிரானதாகும். அரசியல் சாசனத்திற்கு முரணான இச்செயலை அரசும் நீதிமன்றமும் வேடிக்கை பார்ப்பது வருத்தப்பட கூடியதாகும்.
இழப்புகள்:
சாதி வெறியர்களின் இந்த வன்முறைத் தாக்குதலில் மொத்தம் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. மிதிவண்டிகள், இருசக்கர மோட்டார் வாகனங்கள், கார், மினி ட்ரக் உட்பட 300-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டதுடன் திட்டமிட்டு எரிக்கப்பட்டுள்ளன. மேலும் மர வேலை செய்யக்கூடிய ரவி என்பவருக்குச் சொந்தமான ரூ.7 இலட்சம் மதிப்பிலான தேக்கு உள்ளிட்ட மரச் சாமான்களும், ஒலிப்பெருக்கி நிலையம் நடத்தக்கூடிய சிவராஜ் என்பவருக்குச் சொந்தமான ரூ.10 இலட்சம் மதிப்பிலான ஒலிப்பெருக்கி சாமான்களும், மற்றும் கேபிள் இணைப்பு நடத்திவந்த சிவலிங்கம் என்பவருக்கு சொந்தமான ரூ.15 இலட்சம் மதிப்பிலான பொருள்களும் எரித்து சாம்பலாக்கப்பட்டுள்ளன.
பலரது வீடுகளில் திருமணத்திற்காகவும், தீபாவளிக்காகவும் சேர்த்து வைக்கப்பட்டிருந்த நகை, பணம் போன்றவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. மேலும் கால்நடைகளும் திருடப்பட்டுள்ளன. இவைதவிர வீட்டு உபயோகப் பொருட்களுடன் டி.வி., பிரிட்ஜ், வாசிங் மெசின், கட்டில், பீரோ உள்பட அனைத்துப் பொருள்களும் கொளுத்தப்பட்டுள்ளன. பத்திரங்கள், அடையாள அட்டை, குடும்ப அட்டை, சாதிச் சான்றுகள், மதிப்பெண் சான்றிதழ்கள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் சாம்பலாக்கப்ட்டுள்ளன.
நத்தம் காலனியில் சக்தி என்பவரது வீட்டில் பாதுகாக்கப்பட்டு வந்த தலித் மக்களுக்குப் பாத்தியப்பட்ட கொடைகாளியம்மன் கோவிலுக்குச் சொந்தமான பல கோடி மதிப்பிலான கோவில் தங்கம், வெள்ளி நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. மேலும் பெருமளவில் சேமித்து வைக்கப்பட்டிருந்த உணவுதானியங்களும், உடைகளும் மின் சாதனங்கள் உள்ளிட்ட விலைமதிப்பற்ற உடைமைகளும், முழுவதுமாக எரித்து நாசமாக்கப்பட்டுள்ளன.
மேற்கண்ட அனைத்தையும் கணக்கிடும்போது இந்த நான்கு கிராமங்களிலும் தலித் மக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு ரூ.25 கோடிக்கு மேல் ஆகும் என எமது குழு கருதுகிறது.
பரிந்துரைகள்
1) தருமபுரி மாவட்டம் நத்தம் காலனி, அண்ணா நகர் காலனி, கொண்டம்பட்டி, செங்கல்மேடு ஆகிய கிராமங்களில் ஆதிக்கச் சாதியினரால் நடத்தப்பட்ட இச்சாதிய வன்கொடுமையை இலயோலா கல்லூரி மாணவர்கள் வன்மையாகக் கண்டிக்கின்றனர்.
2) சம்பவம் நடந்த 7 -ஆம் தேதிக்கு பத்து நாட்களுக்கு முன்பாகவே அப்பகுதியில் இத்தகைய தாக்குதல் நடைபெற வாய்ப்புள்ளது என்ற செய்தி உள்ளூர் காவல்துறைக்கு தெரிந்திருந்தும் அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏதும் எடுக்கவில்லை. சம்பவத்தன்று நத்தம் காலனிப் பகுதிக்குள் காவல்துறையை நுழைய விடாமல் சுமார் 4 மணி நேரம் வன்முறையாளர்களில் ஒரு பிரிவினர் நாயக்கன்கொட்டாய் பகுதியில் சாலை மறியல் செய்து கொண்டிருந்த வேளையில், அவர்கள் மீது தடியடி நடத்தி கலைத்திருக்கலாம். அல்லது அருகிலுள்ள கோணங்கிநாயக்கனஅள்ளி வழியாக மேற்கண்ட பகுதிக்குள் நுழைந்து வன்முறையைக் கட்டுக்குள் கொண்டுவந்து இருக்கலாம். இவை எதையும் கடைபிடிக்காமல் காவல்துறை கடமை தவறியிருப்பது கண்டனத்துக்குரியது. எனவே கடமை தவறிய காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.
3) பாதிக்கப்பட்ட கிராமங்களின் வரிசையில் செங்கல்மேடு மற்றும் ஆலங்கரை சேர்க்கப்படவில்லை. செங்கல்மேடு கிராமத்தில் வீடுகள் மட்டுமல்லாமல் விவசாய நிலப்பகுதியும் ஆதிக்கச் சாதியினரால் சேதப்படுத்தப் பட்டுள்ளது. எனவே நத்தம் காலனி, அண்ணா நகர் காலனி, கொண்டம்பட்டி வரிசையில் செங்கல்மேடு மற்றும் ஆலங்கரை ஆகிய கிராமங்களையும் சேர்த்து அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கவேண்டும்.
4) அரசு அறிவித்துள்ள நிவாரண நிதியான ரூ.50,000 முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கிராமங்களில் நடைபெற்ற சாதிய அடக்குமுறை என்பது தலித் மக்கள் மீதான வன்கொடுமை ஆகும். எனவே வன்முறை நடந்த பகுதியை வன்கொடுமைப் பகுதியாக அறிவித்து, உடனடி நிவாரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் தலா ரூ.5 இலட்சத்துடன் மொத்தம் ரூ.10 இலட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும்.
5) மேலும் இதுவரை பாதிக்கப்பட்ட தலித் மக்கள் அன்றாடம் வேலைக்குச் சென்று சிறிது சிறிதாக சேர்த்து வைத்த பணமும் நகையும் சாதிவெறிக் கும்பலால் கொள்ளையடிக்கப்பட்டு, வீடுகளும் தீவைத்து கொளுத்தப்பட்டுள்ளன. இதனால் அம்மக்கள் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்கள் இழிநிலையிலிருந்து தங்களை மீட்டுக் கொள்ளவே கட்டட வேலைகளுக்குச் செல்கின்றனர். எனவே அம்மக்கள் பொருளாதார சுயமரியாதையுடன் வாழ்ந்திடவும், அவர்களின் முன்னேற்றம் கருதியும், இனிமேலும் இத்தகைய சாதிக் கொடுமைகள் நிகழாமல் தடுத்திடவும் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் தலா ஒருவருக்கு கெளரவமான அரசு வேலை வழங்க கள ஆய்வு குழு பரிந்துரைக்கிறது.
6) பாதிக்கப்பட்ட மக்களுக்கான அரசின் நிவாரணப் பொருள்கள் இன்னும் முழுமையாக அம்மக்களைச் சென்றடையவில்லை. எனவே அரசு சற்றும் தாமதிக்காமல் போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்ட மக்களை மீள்குடியமர்வு செய்வதற்கு ஆவண செய்ய வேண்டும். மேலும் அவர்கள் முழுவதுமாக மீள்குடியமர்வு செய்யப்படும்வரை அடிப்படை உரிமைகளான உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றிற்கு அரசே முழு பொறுப்பேற்க வேண்டும்.
7) பாதிக்கப்பட்ட தலித் மக்களின் அடையாள அட்டைகள், ரேசன் அட்டைகள், மாணவர்களின் சான்றிதழ்கள், மேலும் மக்களின் அனைத்துவிதமான சான்றிதழ்கள், பத்திரங்கள் சாதிவெறியர்களால் சாம்பலாக்கப் பட்டுள்ளன. எனவே கூடிய விரைவில் அம்மக்கள் மற்றும் மாணவர்களுக்கான அனைத்து விதமான சான்றிதழ்களையும் வழங்கிடும் வகையில் அரசின் வருவாய்த் துறை அதிகாரிகள் அடங்கிய சிறப்புக்குழு ஒன்றை அமைத்திட வேண்டும். அதிகாரிகள் நேரடியாக கிராமத்திற்குச் சென்று மேற்கண்ட ஆவணங்களை ஒரு மாத காலத்திற்குள் வழங்கிட வேண்டும்.
8) சேதப்படுத்தப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 268 என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுளள்ளது. ஆனால் உண்மையில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் இவ்வன்முறைச் சம்பவத்தில் சேதப்படுத்தப்பட்டுள்ளன என்பது எமது ஆய்வில் உறுதியாகிறது. இது அரசு அதிகாரிகளின் உண்மையை மூடி மறைக்கும் முயற்சியாகும். இத்தகைய அணுகுமுறையை வன்மையாகக் கண்டிக்கிறோம். மேலும் இக்கிராமங்களில் தமிழகத்தின் பூர்வீகக் குடிமக்களின் மீது இதுவரையில்லாத அளவில் சாதிய அடக்குமுறை ஏவப்பட்டுள்ள இச்சூழலில், தமிழக முதலமைச்சர் என்ற முறையில் இதுவரை நேரில் சென்று ஆய்வு செய்யாதது கண்டிக்கத்தக்கது. எனவே தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்து அரசு அதிகாரிகள் மூலம் நிவரண நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்.
9) தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற இந்த வன்கொடுமைச் சம்பவத்தை விசாரிக்க சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அரசு சி.பி.ஐ விசாரணைக்கு முன் வராத பட்சத்தில் உயர்நீதிமன்றம் தாமே முன்வந்து அதற்கான உத்தரவைப் பிறப்பிக்க வலியுறுத்துகிறோம்.
10) இச்சாதிய வன்முறை தொடர்பாக வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மக்களால் போடப்பட்டுள்ள வழக்குகளை விசாரிக்கவும், குற்றவாளிகளுக்கு தண்டனையை உறுதிப்படுத்தவும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்-1989-ன் படி சிறப்பு நீதிமன்றம் ஒன்றை அமைத்து விசாரணையை மேற்கொள்ள வேண்டும். (CHAP-IV(14)- For the purpose of providing for speedy trial, the State Government shall, with the concurrence of the Chief Justice of the High Court, by notification in the Official Gazette, specify for each district a Court of Session to be a Special Court to try the offences under this Act.)
11) மேற்படி வன்முறை தாக்குதல்களால் மாணவர்கள் உளரீதியாக மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மேலும் அவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு நெருங்கிவரும் வேளையில் படிப்பின் மீது கவனம் செலுத்த முடியாத நிலையில் உள்ளனர். அதுமட்டுமின்றி அவர்களது வகுப்பறைகளில் மற்ற மாணவர்கள் இவர்களை தனிமைப் படுத்துகின்ற சூழலும் நிலவி வருகிறது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. எனவே இம்மாணவர்களுக்கு உள ஆற்றுப்படுத்துதல் நடத்தி, வருகின்ற தேர்வுக் காலங்களில் அவர்கள் மீது தனிக் கவனம் செலுத்த வேண்டும். மேலும் இம்மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு வருங்கால வைப்பு நிதியாக ஒவ்வொரு மாணவருக்கும் தலா ரூ.1 இலட்சத்தை அரசு செலுத்த வேண்டும்.
12) அரசியல் சாசன சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட சாதி மறுப்புத் திருமணம் போன்ற அரசின் கொள்கைகளுக்கு எதிராகப் பேசுவதன் மூலம் மக்களிடையே கலவரத்தைத் தூண்டி, இந்திய இறையாண்மைக்கு குந்தகம் ஏற்படுத்தும் கொங்கு வேளாளர் அமைப்பு, பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் தேவர் கூட்டமைப்பு ஆகியவற்றின் நிர்வாகிகள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அவர்கள் சார்ந்த இயக்கங்களையும், கட்சிகளையும் சட்ட விரோத அமைப்புகளாக அறிவித்து அவைகளை தடைசெய்ய வேண்டும்.
13) தர்மபுரி கலவரத்தில் நேரடியாக ஈடுபட்ட குற்றத்திற்காக வன்னியர் சங்கத் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான காடுவெட்டி குருவை சட்டப் பேரவை தலைவர் அவர்கள் தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி பதவி நீக்கம் செய்ய வேண்டும். மேலும் பா.ம.க நிறுவனர் ராமதாஸ், காடுவெட்டி குரு, மாவட்ட பா.ம.க. இளைஞரணித் தலைவர் மதியழகன், வன்னியர் சங்க மாவட்டச் செயலாளர் கொட்டாவூர் மாது, சின்னச்சாமி, டீக்கடை கிருஷ்ணன், மணி மற்றும் உள்ளூர் பா.ம.க., வன்னிய சங்க நிர்வாகிகள் அனைவரையும் வன்கொடுமை தடுப்புச் சட்டம்-1989-ன் கீழ் கைது செய்ய வேண்டும்.
[(1) CHAP-II(3)(iv)wrongfully occupies or cultivates any land owned by, or allotted to, or notified by any competent authority to be allotted to, a member of a Scheduled Caste or a Scheduled Tribe or gets the land allotted to him transferred.
(2) Section 3 (1) (X) SC & ST (Prevention of Atrocities) Act, 1989 says that whoever, not being a member of a Scheduled Caste or a Scheduled Tribe, – “intentionally insults or intimidates with intent to humiliate a member of a Scheduled Caste or a Scheduled Tribe in any place within public view”.]
14) பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாச்சாத்தி வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும்.
15) ஏற்கெனவே தமிழ்நாட்டில் நடைமுறையிலுள்ள நிலமல்லாத ஏழைகளுக்கு நிலம் வழங்கும் திட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா 5 ஏக்கர் நன்செய் விவசாய நிலம் அரசு வழங்க வேண்டும்.
16) வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்-1989-ன் அடிப்படையில் இந்த வன்முறைச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தாரிடமிருந்தும் புகார் பெறப்பட்டு வன்முறையாளர்கள் இனம் காணப்பட்டு அவர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.
17) மேற்குறிப்பிட்ட இருபது வன்னிய கிராமங்களிலும் வருவாய்த்துறை மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வன்னியர்கள் திருடி பதுக்கி வைத்துள்ள பணம், நகை, கால்நடைகள் மற்றும் இதர பொருட்களை மீட்க வேண்டும். அவ்வாறு திருடியவர்கள் மீது தனியே திருட்டு வழக்கு பதிவு செய்ய வேண்டும். மேற்கண்ட கிராமங்களில் அமைந்துள்ள வங்கிகளில் சம்பவத்துக்குப் பிறகான வங்கிப் பரிவர்த்தனைகளை ஆய்வு செய்து முறைகேடாக டெபாசிட் செய்துள்ள தொகைகள் குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
– இலயோலா கல்லூரி மாணவர்களின் கள ஆய்வுக் குழு