நாங்களே மாற்று என்ற கோஷத்தோடு தமிழக அரசியல் களத்திற்கு வந்தார் சீமான். ஈழப் போரின் முடிவுக்குப் பின்னர் அதை வைத்தே கட்சி துவங்கிய சீமான். தமிழகம் முழுக்க ஓரளவுக்கு இளைஞர்களைக் கவர்ந்தார்.ஒவ்வொரு தொகுதிகளிலும் குறுகிய காலத்தில் நாம் தமிழர் கட்சி இளைஞர்களிடம் செல்வாக்குப் பெற்றது. ஆனால், அது தமிழகத்தில் பெரிய கட்சிகளை பாதிக்கும் அளவுக்கு இல்லா விட்டாலும் கவனம் ஈர்க்கும் அளவுக்கு நாம் தமிழர் கட்சி இளையோரை ஒருங்கிணைத்தது. தமிழரே தமிழரை ஆள வேண்டும். திமுகவை அழிக்க வேண்டும். திராவிடத்தை வீழ்த்த வேண்டும். பெரியார் கொள்கைகளை புதைக்க வேண்டும் இவைகளைத்தான் மேடை தோறும் சீமான் பேசி வந்தார்.
இதற்கு வரவேற்பும் கிடைத்தது. ஆனால் கட்சி துவங்கிய இந்த பத்து ஆண்டுகளில் தமிழகத்தை ஆட்சி செய்த அதிமுக அரசுக்கு எதிராக அவர் எதையும் பேசியதில்லை. ஜெயலலிதா உயிரோடு இருந்த போது அவருக்காக பிரச்சாரம் செய்தார். எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வந்த பின்னர் அவரை அடிக்கடி சந்தித்துப் பேசிய சீமான். இந்த தேர்தலில் தனித்துப் போட்டியிட்டாலும் கருத்தியல் ரீதியாக அதிமுகவையும் எடப்பாடி பழனிசாமியையும் ஆதரித்துப் பேசுகிறார்.
சீமானின் சமீபத்திய பேச்சுக்களில் திமுகதான் எங்கள் அரசியல் எதிரி என திராவிடக் கோட்பாட்டை கடுமையாக எதிர்த்து பேசுகிறார். அதில் அதிர்ச்சியடைய எதுவும் இல்லை. அது அவரது இயல்பு கட்சியின் இயல்பு. ஆனால், அதிமுகவை ஆதரிக்கிறார்.
சமீபத்திய அவரது நேர்காணலில் சசிகலாவைச் சந்தித்த போது அதிமுகவுடன் இணைவது பற்றி விருப்பம் இருந்தால் சொல்லுங்கள் நான் எடப்பாடி பழனிசாமியிடம் பேசிப் பார்க்கிறேன் என்று சொன்னதாகக் கூறுவதோடு. தான் பேசியதாகவும் அதற்கு சாத்தியமில்லாமல் போய் விட்டதாகவும் சொல்கிறார். மேலும், சசிகலா பாஜகவின் அழுத்தத்தால் அரசியலில் இருந்து விலகவில்லை. அவராகவே விலகிக் கொண்டார் என்றும் சொல்கிறார்.
இதற்கு முன்னர் ஒரு பேட்டியில் அதிமுக எதிர்க்கப்பட வெண்டிய கட்சி அல்ல என்றும் சொன்னார். நாம் தமிழர் என்னும் கட்சி நாங்களே மாற்று என்று அரசியல் களத்தில் இறங்கி இளைஞர்களின் ஆதரவைப் பெற்ற நிலையில் திமுகவை எதிர்ப்பது போல அதிமுகவை எதிர்க்காமல் பாஜகவையும் எதிர்க்காமல் வெறும் திமுக எதிர்ப்பை மட்டுமே வைத்து சீமான் அரசியல் செய்வதோடு. பிளவு பட்டிருக்கும் அதிமுகவை ஒருங்கிணைக்கவும் சீமான் முயன்றுள்ளார்.
நாம் தமிழர் வேட்பாளர்கள் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தனித்துபோட்டியிடுகிறார்கள். நாங்கள் ஆட்சியைப் பிடிப்போம் என்றும் சொல்கிறார்கள். நாம் தமிழர் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்றால் திமுகவும் தோற்க வேண்டும். அதிமுகவும் தோற்க வேண்டும். இரு கட்சிகளும் தோற்றால்தான் நாம் தமிழர் வெற்றி பெற முடியும். ஆனால், சீமான் அதிமுகவுக்கு ஆதரவாகப் பேசி அதிமுகவை வலுப்படுத்தும் நோக்கோடும் செயல்பட்டு வந்தால். அதிமுகதான் வெற்றி பெறுமே தவிற நாம் தமிழர் இல்லை.
இது நாம் தமிழர் கட்சியினரிடையே பல கேள்விகளை எழுப்பியுள்ளது.