Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழ் வழக்காடு மொழி மக்கள் சக்தியை திரட்ட வேண்டும்- விஜயகாந்த்.

தமிழ் வழக்காடு மொழி ஆவதற்கான வழக்கறிஞர்களின் போராட்டத்தை ஆதரித்து தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை. மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தமிழை வழக்காடு மொழியாக்க கோரி கடந்த 7 நாட்களாக வக்கீல்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இதற்கு அனைத்து வக்கீல்களும் ஆதரவாக உள்ளனர். இதை மக்களும் வரவேற்கின்றனர். தமிழ்நாட்டில் உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும் என்பது ஜனநாயகமாகும். இதை நடைமுறைப்படுத்துவது மத்திய மற்றும் மாநில அரசுகளின் கடமையாகும்.உண்ணாவிரதம் இருந்து வரும் வக்கீல்களிடம் மத்திய அமைச்சர் மு..அழகிரி இன்னும் 15 நாட்களில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்றுள்ளார். ஆனால் வக்கீல்களோ, இது சம்பந்தமாக சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி உறுதி அளிக்க வேண்டும் என்கின்றனர்.வட மாநில உயர் நீதிமன்றங்களில் இந்தியிலேயே வாதாடுகின்றனர். இந்தி பேசுபவர்களுக்கு கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பு தமிழ் பேசுபவர்களுக்கு மட்டும் தடுக்கப்படுவது என்ன நியாயம். இந்தி நம் நாட்டின் ஆட்சி மொழியாக இருப்பதால் இது சாத்தியம் என்றும், இந்தியாவின் இதர தேசிய மொழிகளுக்கு ஆட்சி மொழி அந்தஸ்து வழங்கப்படாததால் இந்த உரிமை அவர்களுக்கு இல்லை என்றும் தெரிவிக்க கூடும்.இந்திய அரசில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் தொடர்ந்து பங்கேற்கிற்றுக் கொண்டிருந்தும் இந்த கோரிக்கைக்கு இன்று வரை வெற்றி கிடைக்கவில்லை. தமிழக முதல்வர் கருணாநிதி தமிழுக்கு ஆட்சி மொழி அந்தஸ்தை இன்னும் ஏன் பெறவில்லை? இதே வீரப்ப மொய்லி சென்னையில் நடந்த புதிய சட்டமன்ற வளாக திறப்பு விழாவில் கருணாநிதியை இந்திய அரசின் தூண் என்று புகழ்ந்தார். அத்தகைய முதல்வரால் ஏன் இதை நிறைவேற்ற முடியவில்லை.எனவே, தமிழ் மக்களின் இந்த நியாயத்திற்கு மக்கள் சக்தியை திரட்டுவதன் மூலம் தான் வலிவு சேர்க்க முடியும். இதற்கு வக்கீல்கள் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதம் வழி வகுக்கட்டும். அவர்களுக்கு தே.மு.தி.. சார்பில் எங்கள் ஆதரவை தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்.

Exit mobile version