“தமிழ் மக்கள் மீது அமெரிக்காவுக்கு அக்கறை இருக்குமாயின் முதலில் அந்நாட்டின் ஜனாதிபதி பராக் ஒபாமா விடுதலை புலிகளை ஆயுதங்களைக் களைந்து சரணடையுமாறு அழுத்தம் கொடுக்கவேண்டும். புலிகள் சரணடையுமிடத்து அரசாங்கத்தின் மனிதாபிமான பணிகள் தானாகவே நின்றுவிடும்” என்று இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
“சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினரே பாதுகாப்பு வலயத்துக்கு செல்வதற்கு தயங்குகின்ற நிலையில் நாங்கள் எவ்வாறு ஐக்கிய நாடுகள் சபையின் குழுவை அங்கு அனுப்புவது ? ஐ.நாவின் குழு அங்கு செல்ல வேண்டும் என்பதனை கொள்கையளவில் அரசாங்கம் ஏற்றுக்கொள்கின்றது” என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
பொது மக்களுக்கு இழப்புக்கள் ஏற்படக்கூடிய சகலவிதமான யுத்த முனைப்புக்களையும் இரண்டு தரப்பினரும் கைவிடவேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளமை குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் இவ்விடயம் குறித்து தொடர்ந்து கருத்து வெளியிடுகையில்,
“இலங்கை விவகாரம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கருத்து வெளியிட்டுள்ளார். ஆனால் முதலில் விடுதலை புலிகள் ஆயுதங்களைக் கீழே வைக்கவேண்டும் என்று அழுத்தம் கொடுக்குமாறு அவரிடம் இலங்கை அரசாங்கம் கோருகின்றது.
புலிகள் ஆயுதங்களைக் கீழே வைத்து விட்டு அரசாங்க படையினரிடம் சரணடைந்தால் அரசாங்கத்தின் மனிதாபிமான நடவடிக்கைகள் தானாகவே முடிவடைந்துவிடும். அதன்பின்னர் அனைத்து நடவடிக்கைகளையும் முடிவுக்கு கொண்டுவரலாம். எனவே முதலில் அமெரிக்க ஜனாதிபதி புலிகளுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும்.
இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேசத்துக்கு அறிவித்துள்ளோம். எமது நிலைமையை சர்வதேசம் புரிந்துகொள்ளவேண்டும். வெறுமனே அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்காமல் புலிகளை சரணடையுமாறு அழுத்தம் கொடுக்க வேண்டியதே சர்வதேசத்தின் முதன்மை நடவடிக்கையாக அமையவேண்டும்” என்றார்.
பிரிட்டன் பிரான்ஸ்
அதேவேளை மோதல் இடம்பெறும் பிரதேசங்களில் சிக்கியுள்ள பொது மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கைகயை இலகுபடுத்தும் பொருட்டு ஐ.நா. மனிதாபிமான குழுவினரை பாதுகாப்பு வலயத்துக்கு அனுப்பவேண்டும் என அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டன் மற்றும் பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட் ஆகியோர் விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில் அமைச்சரிடம் வினவியபோது பதிலளித்த அமைச்சர், ஐ.நாவின் குழு பாதுகாப்பு வலயத்துக்குச் செல்லச் வேண்டும் என்பதனை கொள்கையளவில் அரசாங்கம் ஏற்றுக்கொள்கின்றது. ஆனால் உபாய ரீதியாகவும் பாதகாப்பு காரணங்களுக்காகவும் அவர்களை அங்கு அனுப்புவது எவ்வகையிலும் சாத்தியமில்லை என்பதனை அரசாங்கம் திட்டவட்டமாக அறிவிக்கின்றது. பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமான விடயமாகும். இந்த விடயத்தில் அலட்சியமாக செயற்பட முடியாது.
சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினரே பாதுகாப்பு வலயத்துக்கு செல்வதற்கு தயங்குகின்ற நிலையில் நாங்கள் எவ்வாறு ஐக்கிய நாடுகள் சபையின் குழுவை அங்கு அனுப்புவது?” என்று கேட்டார்.