ஊடகங்களுக்கான அறிக்கை 13-06-2009
தமிழ் மக்களின் அவல நிலையைப் போக்க
பொது இணக்கப்பாடு அவசியம்
தமிழ் மக்களின் தற்போதைய அவல நிலையை மாற்றியமைக்க அவர்களுக்கு இயல்பு வாழ்க்கையை உறுதி செய்வதுடன், அவர்களது தேசிய அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய, சுயநிர்ணய அடிப்படையிலான சுயாட்சிக்கான அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். இவற்றை வென்றெடுக்க கடந்தகால ஆதிக்க அரசியல் போட்டியைப் புறந்தள்ளி பன்மைத்துவ அடிப்படையிலான மக்கள் ஜனநாயக அரசியல் சூழ்நிலையை உருவாக்கி இடதுசாரி, ஜனநாயக, முற்போக்கு, தமிழ், முஸ்லிம் கட்சிகளும், அமைப்புக்களும் பொது இணக்கப்பாட்டுடன் செயற்படுவதற்கான கலந்துரையாடல்களைச் செய்ய வேண்டுமென புதிய-ஜனநாயக கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.
போருக்குப் பிந்திய இக்கால கட்டத்தில் மூன்று லட்சம் தமிழ் மக்கள் முட்கம்பி வேலிகளுக்கு மத்தியில் தாங்க முடியாத வேதனைகளுடன் அவல வாழ்வு வாழ்ந்து வருகிறார்கள். கடந்த மூப்பது வருட போர் அனர்த்தங்களுடன் வாழ்ந்த தமிழ் மக்கள் இன்றைய சூழலில் மோசமான அரசியல் வெறுமையுடனும் அச்ச உணர்வுகளுடனும் இருந்து வருகின்றனர். இத்தகைய நிலையிலிருந்து மக்களை மீட்பதற்குரிய செயற்பாட்டை மக்கள் சார்பு கட்சிகளும் அமைப்புகளும் முன்னெடுக்க வேண்டும். அதற்கான கலந்துரையாடல்களும் பொது இணக்கப்படும் இடதுசாரிகள் மத்தியில் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதை புதிய – ஜனநாயக கட்சி வலியுறுத்துகின்றது.
இதனைத் தாமதமின்றி மேற்கொள்வதற்காக கீழ்வரும் பத்து அம்சவிடயங்களை புதிய ஜனநாயக கட்சி முன்வைக்கின்றது. இவை நேர்மையும் மக்கள் சார்பும் கொண்ட கட்சிகள் அமைப்புகளால் கலந்துரையாடப்படவும் பொது இணக்கப்பாடுகாணப்படவும் கோரிக்கைகளாக வற்புறுத்தப்படவும் வேண்டும் என வேண்டுகின்றோம்.
1. மாகாணசபை முறையின் கீழ் அரசியமைப்பிற்கான 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதா இல்லையா என்ற வாதப்பிரதிவாதங்களைத் தவிர்த்து இலங்கை வாழ் தமிழ், முஸ்லீம், மலையக தேசிய இனங்களுக்கு சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் ஆகக்கூடிய சுயாட்சியை உறுதி செய்யக்த் தக்கவாறு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்.
2. இடம்பெயர்ந்து தடுப்பு முகாம்பளிலும் ஏனைய முகாம்கள் இடங்களில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் வெகுவிரைவில் அவர்களின் சொந்த இடங்களுக்குச் சென்று குடியேற அனுமதிக்கப்பட வேண்டும். மீள் குடியேற்ற தாமதமின்றி மீளமைப்பு கல்வி சுகாதார சீரமைப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதிய நட்டஈடு வழங்கப்பட வேண்டும். தொடர்ந்தும் பாதுகாப்பு காரணங்களைச் சொல்லி மக்கள் அவர்களின் சொந்த இடங்களில் குடியேறுவதையோ விவசாயம் மீன்பிடி உற்பத்தியில் மற்றும் தொழில்களில் ஈடுபடுவதையோ தடுக்கக் கூடாது.
3. ஏ 9 வீதி மக்களின் சுதந்திரமான போக்குவரத்திற்காகத் திறந்து விடப்பட வேண்டும். வடக்கிற்கான புகையிரதப் பாதை விரைவில் சீரமைக்கப்பட வேண்டும்.
4. போக்குவரத்தில் இருக்கும் பாஸ்முறை நீக்கப்பட்டு சுதந்திர நடமாட்டம் உறுதி செய்யப்பட வேண்டும். அதன் மூலம் விவசாய, மீன்பிடி சந்தைப்படுத்தல் வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
5. அவசரகால சட்ட விதிகளையும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தையும் நீக்க வேண்டும்.
6. அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்.
7. வடக்கு, கிழக்கில் பூரணமான சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை உறுதி செய்யப்பட வேண்டும். அங்கு உயிர்வாழும் சுதந்திரம் உட்பட ஜனநாய மனித உரிமைகள் உத்தரவாதப்படுத்தப்படுவதுடன் கருத்து எழுத்துச் சுதந்திரம் நிலைநாட்டப்பட வேண்டும்
8. நாடெங்கும் தமிழ்மொழியும் அரச கரும மொழியாக நடைமுறையில் அமுல்படுத்தப்பட வேண்டும்.
9. வடக்கு கிழக்கில் திட்டமிட்ட பேரினவாத குடியேற்றங்கள் நிறுவப்பட எடுக்கும் முயற்சிகள் கைவிடப்பட வேண்டும்.
10. வடக்கு கிழக்கிற்கு வெளியில் வாழும் தமிழ் மக்கள் பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு உட்படுத்தப்படாமல் இனரீதியான பாராபட்சங்களுக்குட்படாமல் அவர்களின் சதந்திரமும் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும்.
புதிய ஜனநாயக கட்சியின் மத்தியகுழு முன்வைத்துள்ள மேற்படி தீர்மானத்தை அதன் பொதுச் செயலாளர் சி.கா செந்திவேல் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ளர்.
சி.கா. செந்திவேல்
பொதுச் செயலாளர்