தமிழ் தேசிய மக்கள் முன்னணியினது கண்டன ஆர்ப்பாட்டத்திற்கான தடையுத்தரவை தளர்த்திக்கொள்ள மறுதலித்துள்ள யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று தேசிய பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கலாமென்ற அடிப்படையிலும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது.அண்மையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியானது கண்டன ஆர்ப்பாட்டமொன்றை யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பதாக நடத்த முற்பட்டிருந்தது.எனினும் நீதிமன்றில் யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன்சிகாரேவினால் சமர்ப்பிக்கப்பட்ட மனுவொன்றில் பொதுமக்களுக்கான இடையூறு மற்றும் தீயசக்திகள் சில ஊடுருவி வன்முறைகளில் ஈடுபடப்போவதாக காரணம் கூறி நீதிமன்ற தடையுத்தரவை பெற்றிருந்தனர்.
எனினும் சாதாரணமாக பொலிஸ் மட்டத்தில் அமுல்படுத்தக்கூடிய தடையினை விடுத்து நீதிமன்றினை நாடியமை உள் நோக்கம் கருதியதென தெரிவித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்கான தடையினை விலக்கிக்கொள்ளவும் மனு செய்திருந்தனர்.அம்மனு மீதான விசாரணைகளையடுத்து குறிப்பிட்ட காரணங்களுக்கு மேலாக தேசிய பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கலாமென்ற அடிப்படையிலும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறி தடையினை விலக்கிகொள்ள யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று மறுத்துவிட்டது.