Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழ் சூழலில் ஜனநாயகத்தை கட்டி எழுப்ப முழுமையான ஒத்துழைப்பை வழங்க தயாராக இருக்கின்றோம்:யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்.

  தமிழ் சூழலில் பன்மைத்துவத்தையும் ஜனநாயகத்தையும் கட்டி எழுப்பும் தேவைக்குப் பல்கலைக்கழகத்தை தமிழ் அரசியல் கட்சிகள் பயன்படுத்தலாம். எங்கள் கதவுகளை நாங்கள் திறந்தே விட்டுள்ளோம். நடைமுறை ரீதியாவும் யதார்த்த பூர்வமாகவும் மக்களின் தேவைகளுக்கும், பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண வேண்டும். அவ்வாறு தீர்வு காண்போரையே மக்கள் தமது அரசியல் தெரிவாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.   வன்னி அகதி மக்கள் தொடர்பாக யாழ் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளுடன் தமிழ் கட்சிகள் மனந்திறந்து பேசவும் அடுத்த கட்டத்திற்கு செல்லவும் எங்கள் முழுமையான ஒத்துழைப்பை வழக்க தயாராக இருக்கின்றோம்.

அரைநூற்றாண்டுக்கு மேலாகத் தொடர்ந்த ஈழத் தமிழர்களின் போராட்ட வழிமுறைகள் நிலைமாறும் கட்டத்துக்குள் பிரவேசித்திருக்கும் நிலையில், கடந்த காலப் போராட்ட அனுபவங்களைப் பாடமாகக் கொண்டு புதிய அரசியல் வழிமுறையை மேற்கொள்ள வேண்டிய தேவை தமிழ் சமூகத்துக்கு ஏற்பட்டிருப்பதாக மாணவர் ஒன்றியம் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எல்லாவகையான தொடர்புர்களையும் துண்டிக்கப்பட்டிருக்கும் வன்னி அகதி மக்கள் மீள்குடியேற்றப்படுவதுடன், வடபகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் உள்ளடங்கலாக அனைவரும் தமது சொந்த வாழ்விடங்களில் மீளக்குடியமர்த்தப்பட வேண்டிய தேவை இருப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் மாணவர் ஒன்றியம், தமிழ் மக்களினுடைய கல்வி அபிவிருத்தி பாதுகாப்பு மனித உரிமைகள் என்ற அனைத்து வகையான உரிமைகளை உள்ளடக்கியும் அரசியல் அதிகாரத்தை எற்படுத்த வேண்டிய தேவை இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
 
இழக்க முடியாதவற்றை இழந்து சிந்த முடியாதளவு குருதியைச் சிந்தி உலகத்தின் இரத்த சாட்சியங்களாக இருக்கின்ற வன்னி மக்களது பாதுகாப்பு நலன் என்பவற்றில் அக்கறை கொண்டு செயற்படுமாறு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அனைத்து தமிழ் கட்சிகளிடமும் கோரிக்கை விடுத்துள்ளது.
அந்த அறிக்கையின் முழு விபரம் வருமாறு…
பன்மைத்துவத்தை ஏற்ப்படுத்தி ஜனநாயகத்தைக் கட்டி எழுப்பி தமிழ் மக்களின் இழந்த வாழ்வை மீட்க அனைத்து தரப்பினரையும் ஒத்துழைக்கும்படி யாழ் பல்கலைக்கழக மாணவர்களாகிய நாம் வேண்டி நிற்கிறோம். அரை நூற்றாண்டுக்கு மேல் அனைத்து போராட்ட வழிமுறைகளிலும் பேராடிய ஈழத்தமிழ் மக்கள் இன்று நிலை மாறும் கட்டத்திற்குள் பிரவேசித்துள்ளார்கள். தமிழ் மக்களின் கடந்த கால போராட்ட அனுபவங்களைப் பாடமாகக் கொண்டு நிகழ்காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் உரியதான புதிய அரசியல் வழி முறைகளை மேற் கொள்ள வேண்டி அவசியத்தில் தமி;ழ சமூகம் இன்றுள்ளது.
இதில் முதலாவதாக தகவல் யுகத்தில் எல்லா வகையான தொடர்புர்களையும் துண்டிக்கப்பட்டிருக்கும் வன்னி அகதி மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படவேண்டும். அடுத்து முஸ்லீம் மக்கள் உள்ளடங்கலாகத் தமது சொந்த வாழ்விடங்களை விட்டு வெளியேற்றப்பட்ட சகல மக்களும் மீள்குடியேற்றப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கையை முன்னிறுத்தியும், தமிழ் மக்களினுடைய கல்வி அபிவிருத்தி பாதுகாப்பு மனித உரிமைகள் என்ற அனைத்து வகையான உரிமைகளை உள்ளடக்கியும் அரசியல் அதிகாரத்தை எற்படுத்த வேண்டிய தேவை இன்றிருக்கிறது.
 
இழக்க முடியாதவற்றை இழந்து சிந்த முடியாதளவு குருதியைச் சிந்தி உலகத்தின் இரத்த சாட்சியங்களாக இருக்கின்ற எமது வன்னி மக்களது பாதுகாப்பு நலன் என்பவற்றில் அக்கறை கொண்டு செயற்படுமாறு அனைத்து தமிழ் கட்சிகளையும் கோருகிறோம்.
எங்களிடமிருந்த வன்முறை அரசியலாலும், விட்டுக் கொப்பின்மையினாலும், முரண்பாடுகளாலும் எமது மக்களே அனுபவிக்க முடியாதளவு துயரங்களை அனுபவித்து இன்று முற்கம்பிச் சிறைகளுக்குள் வைக்கப்பட்டுள்ளார்கள். எமது மக்களை கவனிக்காது, அவர்களைப் பார்வையிடாது, மீட்பதற்கு எந்தச் சிறு நடவடிக்கையும் எடுக்காது வாக்குகளை கேட்க வருகின்ற தமிழ் கட்சிகள் மீது எமக்குக் கடுமையான விமர்சனம் உண்டு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள சில பாராளுமன்ற உறுப்பினர்கள் வன்னி மக்களின் உடனடிப் பிரச்சினைகளில் எந்தக் கவனமும் செலுத்தாமல் நடைமுறைச் சாத்தியமான நடவடிக்கைகளில் இறங்காமல் இருப்பது எமக்கு கடும் அதிருப்தியைத் தந்துள்ளது.
ஒட்டுமொத்த தமிழ் மக்களினதும் இன்றைய உடனடிப் பிரச்சனையாக இருப்பது வன்னி மக்கள்தான். அதுவே தாயகத்து மக்களினதும், தமிழக மக்களினதும், புலம்பெயர் மக்களினதும் நெருக்கடி நிலையாக உள்ளது. எனவே முதலில் வன்னி மக்களின் உடனடிப் பிரச்சினையை தீர்த்து அவர்களைத் தடுப்பு முகாங்களிலிருந்து விடுவித்து மீள்குடியேற்றம் செய்ய வலியுறுத்த வேண்டிய அவசியம் உடனடித் தேவையாக உள்ளதைத் தமிழ் அரசியல் கட்சிகள் புரிந்து கொள்ளவேண்டும். எமது மக்களின் இன்றைய மனிதாபிமான பிரச்சினையை அவலத்தை முடிவுக்கு கொண்டு வந்த பிறகு அரசியல் தீர்வை ஏற்படுத்த வலியுறுத்துங்கள். சுயநலமான அரசியல் நோக்கங்களுக்காக வன்னி மக்கைளை பயன்படுத்துவது கண்டு சில தமிழ் கட்சிகள்மீது அதிருப்தி அடைகிறோம்.
வன்னி அகதி மக்களின் விமோசனத்திற்காக நடைமுறையில் இறங்குபவர்களை வன்னி மக்களே தமது பிரதிநியாகத் தெரிவு செய்வார்கள். அவர்களையே புலம்பெயர் மக்களும், தமிழகத்து மக்களும் பிரதிநிதியாக ஏற்றுக் கொள்வார்கள். தமிழ் மக்கள் சிந்திய குருதி வீண்போகாத வகையிலும் அவர்களுக்கு நல்ல வாழ்வுச் சூழலை கட்டி எழுப்ப நேர்மையான நடவடிக்கையில் இறங்குங்கள். தமிழ் மக்களை இனியும் தோற்கடிக்காமல் ஏகபிரதிநிதித்துவத்தின் வன்முறை அரசியலி;ன் அழிவில் தமிழ் மக்களுக்கு தேவைப்படுகிற, உலகத்தின் பொதுப்போக்கான பன்மைத்துவ அரசியல் சூழலையும் மக்கள் ஜனநாயகத்தையும் கட்டி எழுப்ப மனதாரச் செயற்படுங்கள். அனைவரும் ஒன்றினைந்து வன்னி மக்களின் நலன் சார்ந்த விடயங்களை அசாங்கத்திற்கும் சர்வதேசத்திற்கும் எடுத்து கூறுவோம்.
மக்கள் நலன் தொடர்பாக அனைத்து தமிழ் கட்சிகளுடனும் பேசுவதோடு நேர்மையாக, மக்கள் நலனுக்காக அர்பணித்து செயற்படுகிற அரசியல் முனைப்பக்களை நாம் வரவேற்பதுடன் அதன் பின் நின்று முழுமையான எங்கள் ஒத்துழைப்பை தருவதற்கு தயாரக உள்ளோம் என்ற யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் நிலைப்பாட்டை யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துக்கொள்ளுகின்றது.
Exit mobile version