Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழ் ஊடகவியாளர்கள் சுதந்திரமாக செயலாற்ற அனுமதிக்க படவேண்டும் : மனோ கணேசன்

manoதமிழ் ஊடகவியலாளர்கள் உண்மையை கூற வேண்டும் என அமைச்சர் டக்லஸ் தேவானந்தா கூறியுள்ளார். இது மிக நல்ல ஒரு கருத்து. ஆனால், உண்மையை கூறுவதற்கு தமிழ் ஊடகவியலாளர்கள் முதலில் சுதந்திரமாக செயலாற்ற அனுமதிக்கப்பட வேண்டும். இளம் தமிழ் ஊடகவியலாளர்கள், வடக்கிலிருந்து கொழும்புக்கு வந்து தங்கள் சக சிங்கள ஊடகவியலாளர்களுடன் தொழில் உறவு கொள்ள முடியாதுள்ளது. போலிஸ் அவர்களை வழியில் தடுத்து, கஞ்சா கடத்தினார்கள் என்று சொல்லி, நள்ளிரவில் சிறை பிடிக்கிறது. அப்படியும் துணிந்து தடையை மீறி அவர்கள், கொழும்புக்கு வந்து சட்டபூர்வ செயலமர்வு ஒன்றை நடத்தினால், அரசின் இனவாத அடியாட்கள் ஆர்ப்பாட்டம் செய்து அவர்கள் திருப்பி அனுப்புகிறார்கள்.

சுதந்திர தமிழ் செய்தியாளர்களுக்கு, தலைநகரில் ஊடக செயலமர்வு நடத்த உரிமை இல்லை. ஆனால், தமிழ் ஊடகவியாலாளருக்கு என்று அரசாங்கம் யாழ்ப்பாணத்தில் செயலமர்வு நடத்துகிறது. இதை இங்கேயிருந்து போய் அஸ்வர் எம்பி நடத்துகிறார். இனி அரசாங்கத்தின் செய்திகளை மாத்திரம்தான், தமிழ் தொலைக்காட்சிகள், ஊடகங்கள் கூற வேண்டும் என்பதுதான் அரசின் திட்டமா? என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு கொழும்பில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு சிங்கள, தமிழ் மொழிகளில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

அரசு தரப்பு செய்திகளுக்கு சுதந்திர தமிழ் ஊடகங்கள் முழுமையாக இடம் தருகின்றன. அதை எதிரணி தரப்பு தடுக்க முடியாது. தடுக்கவும் கூடாது. அரசுக்கு உள்ளேயும், வெளியேயும் சில கடித தலைப்பு அமைப்புகள் உள்ளன. இவை நாட்டுக்கும், வீட்டுக்கும் கேடு விளைவிப்பவை. ஆனால், அரசாங்கத்தின் அமைச்சர்கள், அதிகாரபூர்வ பேச்சாளர்களின் செய்திகளையும், கருத்துகளையும் நாங்கள் செவிமடுக்க, பார்க்க, வாசிக்க விரும்புகின்றோம். அவற்றை வெளியிடுங்கள் என்றுதான் சுதந்திர தமிழ் ஊடகங்களுக்கு நான் கோரிக்கை விடுக்கின்றேன்.

ஆனால், எதிரணி செய்திகளை அரசுதரப்பு தடுக்க முயலுகிறது என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. அரசின் செய்திகளை மாத்திரம் வெளியிட அரசாங்க ஊடகங்கள் உள்ளன. எல்லா அரசு காலத்திலும் அவை அவ்வந்த அரசுகளின் செய்திகளை மட்டுமே வெளியிட்டு வருகின்றன. ஆனால், அந்நிலைமைக்கு சுதந்திர தமிழ் ஊடகங்களும் போக முடியாது. இன்று ஊடகங்கள், உண்மையை மறைத்து பொய்களை மாத்திரம் சொல்ல முடியாது. பொய் சொன்னால் ஊடகம், செய்தி சந்தையில் நிலைக்க முடியாது. கடந்த கால பாரம்பரிய ஊடக நியமங்கள் இன்றைய நவீன காலத்தில் மாறிவிட்டன. இன்று யூடியுப், முகநூல், டுவிடர், வட்ஸப், வைபர் என்று சமூக தளங்கள் பல வந்துவிட்டன. ஆகவே பொய்கள் உடனயாக அம்பலத்துக்கு வந்துவிடும்.

எனவே சுதந்திர தமிழ் ஊடகவியலாளர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்காமல், அவர்களை சுதந்திரமாக நாடு முழுக்க சென்று செயலாற்ற அனுமதியுங்கள். இன்று இந்த நாட்டிலே எதிரணி தமிழ் கட்சிகள் தமிழ் தேசிய கூட்டமைப்பும், ஜனநாயக மக்கள் முன்னணியும்தான். ஒவ்வொரு பிரச்சனைகள் பற்றியும், நாம் என்ன சொல்கிறோம் என்பதை நாடு முழுக்க வாழும் தமிழ் மக்கள் எதிர்நோக்குகிறார்கள். எங்களிடம் மக்கள் ஆணை இருக்கின்றது. நாங்கள் கடித தலைப்பு கட்சிகள் அல்ல. உங்கள் கருத்துகளையும் கூறுங்கள். எங்கள் கருத்துகளையும் நாம் கூறுவோம். மக்கள் முடிவு செய்யட்டும்.

இந்த நாட்டிலே இன்று சட்டபூர்வ ஊடக செயலமர்வுகள் நடத்த முடியாது. ஊடக மாநாடுகள் நடத்த முடியாது. ஜனநாயக ஆர்ப்பாட்டங்கள் நடத்த முடியாது. செயலமர்வுகளுக்கு எதிராக அடியாட்கள் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். ஊடக மாநாடுகளை அதே அடியாட்கள் அடாவடியாக உள்நுழைந்து குழப்புகிறார்கள். ஜனநாயக ஆர்பாட்டங்களுக்கு எதிராக பொலிஸ் நீதிமன்ற தடை உத்தரவை பெறுகிறது. ஆனால், தீவிரவாத கட்சிகளுக்கு இனவாத கூட்டங்களை நடத்த அதே போலிஸ் இடம் தருகிறது. கொல்லப்படும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து இன்று நடைபெறவிருந்த ஆர்பாட்டம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக எவரும் ஆர்ப்பாட்டம் நடத்த கூடாது என பொதுபல சேனை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இவை அனைத்துக்கும் பின்னால் இருந்து இனவாத அடியாட்களை ஏவி விடும், அந்த மர்ம கை யாருடையது? நான் இது தொடர்பில், பொதுபல சேனை ஞானசார தேரரை குறை சொல்லமாட்டேன். சட்ட நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்க்கும் பொலிஸ் மாஅதிபரையும் குறை சொல்லமாட்டேன். இவர்கள் கருவிகள். இவற்றுக்கு இந்த அரசாங்கமே பொறுப்பு கூறவேண்டும். இந்த மர்ம கை அரசாங்கத்தின் கை. இந்த கையை நாம் ஜனநாயகரீதியாக உடைக்க வேண்டும். சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் உடைத்தெறிய வேண்டும்.

Exit mobile version