நேற்றைய தினம் 11.25.2013 ஞாயிறு பல தமிழ் மொழிச் செய்தி மற்றும் அரசியல் இணையங்கள் உள்ளீட்டாளர்களின் தாக்குதலுக்கு உள்ளாகின. இனியொரு, சங்கதி24, பதிவு உட்பட மேலும் சில இணையங்கள் மீதான தாக்குதல்களும் முயற்சிக்கப்பட்டன. தமிழ்ப் பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் பல பிழைப்புவாதிகளின் பிடிக்குள் சிக்கியிருக்கும் சிக்கலான காலகட்டம் ஒன்றில் வாழ்கிறோம்.அப்பாவி மக்களின் அவலங்கள் கிரிமினல்களின் வியாபாரப் பொருளாக மாறியுள்ள அருவருப்பை எமது கண்முன்னே காண்கிறோம். மாபியாக் குழுக்களும் கிரிமினல்களும் அப்பாவி மக்களை இரட்சிப்பவர்களாக உலாவரும் உலகில் இவ்வாறான தாக்குதல்கள் யாரால் எங்கிருந்து நடத்தப்படுகிறது என்பதை அனுமானிப்பது இலகுவானதல்ல. விக்கிலீக்ஸ் போன்ற இணையங்கள் பல தடவைகள் இவ்வாறான தாக்குதல்களுக்கு உள்ளாகியிருக்கின்றன. எது எவ்வாறாயினும் நேற்று தாக்குதல் நடத்தப்பட்ட இணையங்களிடையே ஒரு பொதுமைப்பாட்டைக் காணலாம். பிரித்தானியாவை மையமாகக் கொண்டிருக்கும் பல்தேசியப் பெருநிறுவனமான லைக்கா மோபைல் இற்கும் இலங்கை அரசாங்கத்திற்குமான செய்திகளை இந்த இணையங்கள் வெளியிட்டன என்பதே அது.
இனியொரு தாக்குதலுக்கு உள்ளான போது தொலைபேசியில் தொடர்புகொண்டவர்களும், மின்னஞ்சல் அனுப்பியவர்களும், குறுஞ்செய்தி பரிமாறியவர்களும் மனிதம் இன்னும் செத்துவிடவில்லை என்பதற்கு ஆதாரமானவர்கள்.