Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழ் அரசியல் தலைமைகளிடம் ஒற்றுமை இல்லாதிருப்பது வேதனைக்குரியது! : கருணா.

முஸ்லிம் அரசியல் தலைமைகளிடம் காணப்படும் ஒற்றுமை தமிழ் அரசியல் தலைமைகளிடம் இல்லாதிருப்பது வேதனைக்குரியது ” என தேசிய நல்லிணக்க அமைச்சரான விநாயகமூர்த்தி முரளீதரன்( கருணா) கூறுகின்றார்.

கடந்த ஒரு வார காலமாக மட்டக்களப்பில் தங்கியிருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு நேரில் விஜயங்களை மேற்கொண்டு பலரையும் சந்தித்து வரும் அவர் நேற்று மாலை காத்தான்குடியில் முஸ்லிம்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது இதனை தெரிவித்துள்ளார்.இந் நிகழ்வில் மாகாண சுகாதார சேவைகள் அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் உட்பட பலர் உரையாற்றினர்.

மாகாண சுகாதார சேவைகள் அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் அலுவலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,”கிழக்கு மாகாணத்தைப் பொறுத்த வரை யுத்தத்தினாலும் சுனாமி அனர்த்தத்தினாலும் பல்வேறு அழிவுகளையும் இழப்புகளையும் சந்தித்துள்ளது.இந் நிலையில் இம் மாகாணத்தை கட்டியெழுப்ப வேண்டிய பணியில் சகல இனங்களும் இணைந்து செயல்பட வேண்டும்.

குறிப்பாக எமது மாவட்டதைக் கட்டியெழுப்புவது என்றால் அது தமிழ் மற்றும் முஸ்லிம்களின் ஒற்றுமையை வலுப்படுத்துவதில் தான் தங்கியுள்ளது.என்னைப் பொறுத்த வரை இன மத வேறுபாடின்றி சகல இனங்களுக்கும் சேவையாற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன் தான் தேசிய நல்லினக்க அமைச்சை பொறுப்பேற்றுள்ளேன்.

தமிழ் மக்களைப் பொறுத்த வரை அவர்கள் அமைதியான வாழ்க்கையைத் தான் எதிர்பார்க்கின்றார்கள்.அது தற்போது கிடைத்துள்ளது.இதனை சரியாகப் பயன்படுத்துவது என்றால் அது தமிழ் அரசியல்வாதிகளின் ஒற்றுமையிலேயே தங்கியுள்ளது.

தற்போது கிடைத்துள்ள நல்ல சந்தர்ப்பத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தவற விடக் கூடாது.அரசாங்கத்தின் அபிவிருத்தி மற்றும் சமாதான நடவடிக்கைகளுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு அளிக்க வேண்டும்.இதனைத் தான் மக்களும் எதிர் பார்க்கின்றார்கள்.” என்றார்.

Exit mobile version