இவ்வாறு நாம் இலங்கையர் அமைப்பின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் உதுல் பிரேமரட்ண நேற்று தெரிவித்தார்.
மகஸின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளைப் பார்வையிட நாம் இலங்கையர் அமைப்பின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் உதுல் பிரேமரட்ண நேற்று அங்கு சென்றார்.அங்கு தமிழ் அரசியல் கைதிகள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளை அவர் கேட்டறிந்து கொண்டார்.
இதுதொடர்பாக மன வருத்தமுடன் அவர் தெரிவித்தவை வருமாறு
கொழும்பு மகஸின் சிறைச்சாலைக்கு நேற்றுக்காலை சென்று அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளைச் சந்தித்து, அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடினேன். தாங்கள் எதிர்கொள்ளும் சில பிரச்சினைகள் தொடர்பாக அவர்கள் என்னிடம் மனம்விட்டுக் கூறினார்கள். அதில் சில விடயங்கள் எனது கண்களை கலங்க வைத்தன.
குறிப்பாக தமிழ் அரசியல் கைதிகளை தடுத்து வைப்பதற்கு சிறைகளில் வேறான பகுதிகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தமிழ் கொலை, கொள்ளை, பாலியல் துஷ்பிரயோகம், போதைப் பொருட்கடத்தல் ஆகிய குற்றச் செயல்களில் ஈடுபட்டு, தண்டனை அனுபவித்து வருகின்ற கைதிகள் இருக்கும் இடத்திலேயே அரசியல் கைதிகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த நிலையில், அந்த கைதிகளால் அரசியல் கைதிகள் பல்வேறு வகையில் துன்புறுத்தப்படுகிறார்கள். ஆடைகளை பலவந்தமாகக் கழற்றி கேவலப்படுத்தி, தாக்கப்படுகிறார்கள். அத்துடன், யுத்தத்தால் ஏற்கனவே உள, உடல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள இந்த அரசியல் கைதிகளை ஏனைய கைதிகள் தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற பட்டம் கட்டி, அவமானப்படுத்துகிறார்கள்.
அது மாத்திரமல்ல, கடந்த வாரம் அரசியல் கைதிகளுடன், ஏனைய கைதிகளை நீதிமன்றில் ஆஜர்படுத்திவிட்டு, மீண்டும் சிறைச்சாலை பஸ்ஸில் சிறைக்கு அழைத்துவரும் வழியில் அரசியல் கைதிகளின் ஆசனத்திற்குச் சென்று, அவர்களை அடித்து, பலவந்தமாக ஆசனத்திலிருந்து எழும்பச் செய்து அந்த இடத்தில் ஏனைய கைதிகள் அமர்கிறார்கள்.
தமிழீழ விடுதலைப் புலியே, பஸ், பொது மக்கள் மீது குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்ட தீவிரவாதியே உனக்கெதற்கு ஆசனம் என்று கூறி அரசியல் கைதிகளின் மனதைக் காயப்படுத்துகிறார்கள் ஏனைய சிங்கள கைதிகள்.
இந்தக் கொடூர செய்கைகளைக் கண்டும் காணாதவர்களைப் போல சிறை அதிகாரிகள் மேலே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அத்துடன், சிறைச்சாலைக்குள் போதுமான அளவு மலசல கூட வசதியில்லை. அவர்களுக்கான அடிப்படை வசதிகளும் இல்லை. இவ்வாறான சங்கடமான நிலையிலேயே அரசியல் கைதிகள் தமது சிறை வாழ்வை அனுபவித்து வருகின்றனர்.
உந்துல் அண்மையில் எழுதிய கட்டுரையின் மொழியாக்கம்:
தேசிய ஒருமைப்பாடு வேண்டுமானால் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள் ! : உந்துல் ப்ரேமரத்ன