தமிழ் அரசியல் கைதிகள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் வன்முறைகள் மற்றும் நில ஆக்கிரமிப்பைக் கண்டித்தும் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தியும் வடமராட்சி – நெல்லியடியில் எதிர்வரும் 17ம் திகதி கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தப் போவதாக தமிழ்தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது.
நெல்லியடி பேருந்து நிலையத்தில் இக்கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெறுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் நேற்று மாலை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி அறிக்கையில் முக்கியமாகத் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு,
கடந்த 4ஆம் திகதி வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் மீது சிறைக்காவலர்கள் மற்றும் விசேட அதிரடிப்படையினர் ஈவிரக்கமற்ற காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை நடத்தினர்.
இத்தாக்குதலில் நிமலரூபன் படுகொலை செய்யப்பட்டதுடன், டில்றுக்சன் என்பவர் கடுமையாகத் தாக்கப்பட்டதால் கோமாநிலையில் வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை, மேலும் பல அரசியல் கைதிகள் கடுமையாகத் தாக்கப்பட்டு படுகாமடைந்துள்ளனர்.
முன்னாளர் போராளிகள் சிறப்பாகப் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் மீள இணைக்கப்படும் செயற்பாடுகளை அரசாங்கம் சிறப்பாக செய்வதாக பொய்ப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையிலேயே இந்த வவுனியா சிறைச்சாலையில் மேற்படி தாக்குதல் சம்பவம் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
காட்டுமிராண்டித்தனமான இத்தகைய தாக்குதல்கள் தமிழ் அரசியல் கைதிகள் மீது நடாத்தப்படுவது இது முதற்தடவையல்ல.
அன்று வெலிக்கடையிலும், பின்னர் பிந்துனுவெவவிலும் இன்று வவுனியாவிலுமென இது ஒரு தொடர்கதையாகவே மாறிவருகின்றது.
தமிழர் அரசியலில் இயங்கு சக்தியாக திகழ்ந்தவர்கள் எனக் கருதியே இவர்கள் திட்டமிடப்பட்டு படுகொலை செய்யப்படுகின்றனர்.
தமிழ் அரசியல் கைதிகள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் இத்தகைய கொலைகளை கண்டித்தும், தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை உடன் விடுவிக்கக் கோரியும், தமிழர் தாயகத்தில் அரசினால் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலப்பறிப்பைக் கண்டித்தும் எதிர்வரும் 17ஆம் திகதி புதன்கிழமை நெல்லியடி பஸ்நிலையத்தில் போராட்டம் ஒன்றினை அமைதியாகவும், ஐனநாயக முறையிலும் நடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இப்போராட்டத்திற்கு பொது மக்கள், பொதுஅமைப்புக்கள், அரசியல் தலைவர்கள், சிவில் சமூகப் தலைவர்கள் அனைவரையும் கலந்துகொண்டு ஆதரவு வழங்குமாறு அன்புடனும் உரிமையுடனும் அழைப்புவிடுக்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.