இவ்வாறு இந்துஸ்தான் ரைம்ஸ் பத்திரிகை நேற்று புதன்கிழமை தெரிவித்துள்ளது.அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;வெறுமையாகக் காணப்பட்ட நகரங்களின் வெளிப்புறத்தே கைவிடப்பட்ட நிலையில், கால்நடைகள் அலைந்து திரிந்தன. நூற்றுக்கணக்கான இந்தப் பசுக்கள் வீதியில் செல்லும் பஸ்களுக்கு மிகுந்த ஆபத்தைக் கொடுப்பனவாகவுள்ளன. ஏ9 வீதி வழியாக இப்போது பஸ்கள்,வான்கள்,ட்ரக் வண்டிகள் சென்று வருகின்றன. பல ஆண்டுகளாக ஏ9 வீதி மூடப்பட்டிருந்தது. ஜனவரிக்குப் பின்னர் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டுவரை யுத்தத்தின் சுமையைத் தாங்கிக் கொண்டதாக அந்த வீதி இருந்தது. இப்போது அந்த வீதியால் செல்லும் வாகனங்களில் உல்லாசப் பயணிகள் நிறைந்து காணப்படுகின்றனர். அப்பிள்,தோடம்பழங்கள் யாழ்ப்பாணத்திற்குக் கொண்டு செல்லப்படுகின்றன. இந்த ஏ9 வீதி 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரிட்டிஷாரால் நிர்மாணிக்கப்பட்டதாகும். இந்த வீதியானது இரு தனியான அடையாளத்துவங்களைக் கொண்டவர்களை ஒன்றுசேர்ப்பதற்குப் பதிலாக தனித்தனியாக கடந்த 27 ஆண்டுகளாக பிரித்து வைத்திருந்தது. 2008 வரை விடுதலைப்புலிகளும் இராணுவமும் நெடுஞ்சாலையிலுள்ள ஓமந்தைக் கிராமத்தில் யுத்தத்தில் பலியானவர்களின் உடல்களைப் பரிமாறிக் கொண்டிருந்தனர். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் கண்காணிப்புடன் இந்த ஓமந்தை வழியான போக்குவரத்து இடம்பெற்றது. 2009 ஜனவரியில் இலங்கை இராணுவம் நெடுஞ்சாலையை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. ஒரு வருடம் கடந்தும் வட பகுதி யுத்தத்தினால் அழிவடைந்ததாகவே காணப்படுகிறது.
யாழ்ப்பாணக் குடாநாட்டின் நுழைவாயிலாக இருக்கும் உப்பளங்கள் நிறைந்த ஆனையிறவு பகுதியில் மரங்கள் மேல் பகுதியை இழந்தவையாகக் காட்சிதருகின்றன. இலங்கையின் விமானப்படை மேற்கொண்ட தாக்குதல்களை ஞாபகமூட்டுபவையாக அவை காணப்படுகின்றன. வீதியில் புலிகள் கவச வாகனமாக மாற்றியிருந்த வீதிறோலர் இப்போது அலங்கரிக்கப்பட்டு காணப்படுகிறது. தென் பகுதியிலிருந்து செல்லும் உல்லாசப் பயணிகள் அதனை பார்வையிட்டுச் செல்கின்றனர்.
கிளிநொச்சியில் சிறிய கடைகள் இடம்பெயர்ந்த மக்களுக்காகத் திறக்கப்பட்டுள்ளன. பஸ் நிலையத்தில் சுமார் 12 தமிழர்கள் பஸ்ஸுக்காகக் காத்துநின்றனர். அருகில் சிங்களப் பாடல் ஒலித்தது. சகல தமிழ் அறிகுறிகளும் அற்றதன்மை காணப்பட்டது. தமிழ் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட வவுனியா நகரத்தில் தென்பகுதி எப்போதும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்துவந்த பகுதியாகும். இப்போது படிப்படியாக மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அப்பகுதி கிட்டத்தட்ட முழுமையாக சிங்களவர்களைக் கொண்டதாக மாறிவருகிறது.