Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழ்ப் பகுதியில் துரித கதியில் சிங்களக் குடியேற்றங்கள் :சிறீதரன்

அகிம்சை வழியிலும், ஆயுதம் ஏந்திய வழியிலும் இலங்கையில் தமிழர்கள் நடத்திய போராட்டத்தில் 3 லட்சம் மக்களும், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகளும் கொல்லப்பட்டுள்ளனர். முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளில் நிகழ்ந்த கடைசிக் கட்ட போரில் மட்டும் 1.40 லட்சம் பேர் கொல்லப்பட்டனர். போர் முடிந்து 3 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் தமிழ் மக்கள் இன்னும் முள்வேலிச் சிறைகளுக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழர் பகுதியில் சிங்களவர்கள் குடியேற்றம் செய்வது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ராணுவ முகாம்களை அமைத்து தமிழ் மக்களின் சுதந்திரமான நடவடிக்கைகளுக்கு பெரும் இடையூறு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.இரண்டாம் தர, மூன்றாம் தரக் குடிமக்களாக தமிழர்கள் நடத்தப்படுகின்றனர். இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகள்தான் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாக இருந்தன. அதற்கான அடையாளங்களையே அழிக்கும் நடவடிக்கையில் இலங்கை அரசு ஈடுபட்டிருக்கிறது.

திருகோணமலை பகுதியில் 22 சதவீதமாக இருந்த சிங்களவர், முஸ்லிம்களின் மக்கள்தொகை தற்போது 72 சதவீதமாக உயர்ந்துள்ளது. அம்பாரத்துறை பகுதியில் 21 சதவீதமாக இருந்த சிங்களவர் மக்கள்தொகை தற்போது 90 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.

இறுதிப் போர் நடந்த முல்லைத் தீவு, முள்ளிவாய்க்கால் பகுதிகளில் மீண்டும் தமிழர்கள் குடியேற அனுமதி மறுக்கப்படுகிறது. சிங்கள ராணுவத்தின் கொலைவெறித் தாக்குதல், இன அழிப்பு உலகுக்கு தெரியவந்துவிடும் என்பதால், அப் பகுதியில் குடியேற்றத்தை தடுத்து வருகிறது.

தமிழர்களின் எதிர்பார்ப்பு: ஜெனீவா தீர்மானம் இலங்கைத் தமிழ் மக்களுக்கு புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இலங்கைத் தமிழர்களுக்கு சுதந்திரம், சம உரிமை கிடைக்கும் என்றால், அது தமிழகத்தில் இருந்து கொடுக்கப்படும் அழுத்தத்தின் காரணமாகவே வழங்கப்படும் என்ற நிலை இப்போது ஏற்பட்டிருக்கிறது.
இவ்வாறு மதுரையில் வழக்குரைஞர் சங்கத்தில் உரையாற்றும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்தார்.

Exit mobile version