தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு புதிய அரசியல் கட்சியென்றபடியால் தேர்தல் ஆணையாளரின் அங்கீகார அனுமதிக்காக காத்திருக்கும் நிலையில் இடதுசாரி ஐக்கிய முன்னணியின் குடைச் சின்னத்தில் போட்டியிடுகின்றது.
வடக்கு,கிழக்கின் ஐந்து மாவட்டங்களிலும் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் மாத்திரம் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் ஏனைய மாவட்டங்களில் இடதுசாரி ஐக்கிய முன்னணியின் சொந்த வேட்பாளர்களே நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அக்கட்சி வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் அண்மையில் கொழும்பில் இடதுசாரி ஐக்கிய முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்னவிற்கும் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கும் இடையே கைசாத்திடப்பட்டுள்ளது.
இதேவேளை, யாழ்.மாவட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான என்.ஸ்ரீகாந்தா தலைமையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், சட்டத்தரணிகள் க.நமநாதன், பொன்.பூலோகசிங்கம் உட்பட மூன்று பட்டதாரிகள் ஏனைய பல்துறைகளைச் சேர்ந்தவர்களும் போட்டியிடுகின்றனர்.அத்துடன் இந்த வேட்பாளர் பட்டியலில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெண்ணொருவரும் போட்டியிடுகின்றார்.