Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழ்த் தலைமைகள் கோரும் சிங்கள்-தமிழ் ஒற்றுமை அதிகாரவர்க்கத்திடம் கிடைக்காது

3000 ரூபா விசேட கொடுப்பணவு, 2006ம் ஆண்டு சுற்று நிரூபத்தின் கீழான அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள உயர்வின்படி வழங்கப்பட வேண்டிய எஞ்சிய ஊதியம் மற்றும் மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தத்தில் இறங்கியுள்ள வைத்தியசாலை சிற்றூழியர்களுக்கு எதிராக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் அரசாங்கத்தினால் அரச ஒடுக்குமுறை கட்டவிழித்து விடப்பட்டுள்ளது. அரச வைத்தியசாலைகளில் 40,000 அளவிலான தொழிலாளர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தை தகர்ப்பதற்காக கொழும்பு தேசிய வைத்தியசாலை, பொரளை சீமாட்டி ரிஷ்வே சிறுவர் வைத்தியசாலை, களுபோவில தென் கொழும்பு பெரிய ஆஸ்பத்திரி உட்பட பல வைத்தியசாலைகளில் முன்னூறுக்கும் மேலான இராணுவச் சிப்பாய்கள் ஆஸ்பத்திரி வேலைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதேபோல், வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் நிரந்தரமற்ற மற்றும் பதில் ஊழியர்களுக்கு வேலை நிறுத்தம் செய்ய உரிமை இல்லை என்றும், சேவைக்கு சமூகமளிக்காத சகல ஊழியர்களும் வேலையை விட்டுச் சென்றவர்களாக கணிக்கப்படுவார்கள் என்றும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன அறிவித்துள்ளார்.
அத்தோடு வேலை நிறுத்தம் செய்யும் சுகாதார ஊழியர்களுக்கு எதிராக பொது மக்களை தூண்டிவிடும் மற்றும் ஒடுக்குமுறையை நியாயப்படுத்தும் பிரச்சாரமொன்றும் அரசாங்க மற்றும் தனியார் வெகுஜன ஊடகங்களால் முன்னெடுக்கப்படுகின்றது.
உலகின் ஏகாதிபத்திய நாடுகளின் வியாபார நிறுவனங்களுக்கு சூறையாடலுக்கு களம் அமைத்துக்கொடுக்கும் மைத்திரி – ரனில் அரசின் ‘நல்லாட்சிக் கோட்பாடு’ ராஜபக்சவின் ஆட்சியை எட்டிப் பிடிக்க முயல்கிறது.
நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் ஏற்படுத்தப் போவதாகப் புதிதாகக் கிளம்பியிருக்கும் முன்னை நாள் புலிசார் அரசியல் தலைமைகள் நல்லிணக்கத்தை போராடும் சிங்கள மக்களிடம் காண்பிப்பதற்குப் பதிலாக அதிகாரவர்கத்திடம் தேடுகிறது.
மேற்கு நாடுகளால் பற்கள் பிடுங்கப்பட்ட தமிழ் அரசியல் தலைமைகள் போராடும் அப்பாவிச் சிங்கள மக்களை அதிகாரவர்க்கத்துடன் இணைந்து ஒடுக்குவதற்குத் தயார். சுய நிர்ணைய உரிமையை நிராகரிக்கும் இலங்கைப் பேரினவாத அரசிற்கு எதிராக ஒடுக்கப்படும் சிங்கள மக்களோடு இணைந்து பேரினவாத அரசைப் பலவீனப்படுத்துவதற்குத் தயாரில்லை.

Exit mobile version