Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழ்க் கைதிகள் மீதான கடும் தாக்குதல்கள் : ஊடகங்களுக்கான அறிக்கை.

ஊடகங்களுக்கான அறிக்கை 15.11.2009

கடந்த பதின்மூன்றாம் திகதி கொழும்பு மகசீன் சிறைச்சாலையின் “ஜே“ பிரிவில் இடம் பெற்ற தமிழ்க் கைதிகள் மீதான கடும் தாக்குதல்கள் மீண்டும் ஒரு சிறைச்சாலைப் படுகொலைகளுக்கு திட்டமிடப்படுகிறதா என்ற அச்சத்தையே ஏற்படுத்தியுள்ளது. அதனால் தமிழ்க் கைதிகளின் உறவினர்களும் தமிழ் மக்களும் குழப்பமும் வேதனையடைந்துள்ளனர்.

சிறைச்சாலைகளில் தமிழ்க் கைதிகள் தாக்கப்படுவதும் கொலைகள் செய்யப்படுவதும் காலத்திற்குக் காலம் தொடர்ந்து வந்த கொடூரச் சம்பவங்களாகும். இதற்கு அடிப்படைக் காரணம் பேரினவாத ஆதிக்க வெறிப்போக்கேயாகும். இந்த மனப்பான்மை கொண்ட சிறை அதிகாரிகளும் அவர்களால் தூண்டிவிடப்பட்ட சிங்களக் கைதிகளுமே அண்மைய தாக்குதலுக்கும் காயங்கள் விளைவிப்பதற்கும் காரணமானவர்கள் என அறிய முடிகிறது. அவ்வாறு எனில் சட்டம் ஒழுங்கு நீதி நியாயம் மனித நேயம் யாவும் எங்கே ஒழிந்து கொண்டன என்றே கேட்கவேண்டி உள்ளது.

இச்சம்பவத்தை எமது புதிய – ஜனநாயக கட்சி மிக வன்மையாக கண்டிப்பதுடன் தம்மீதான தாக்குதலுக்கு நீதிவழங்கக் கோரியும் ஏனைய கோரிக்கைகளை முன்வைத்தும். தமிழ்ச் சிறை கைதிகள் முன்னெடுத்து வரும் உண்னாவிரதப் போராட்டத்திற்கு தனது ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறது.

இவ்வாறு புதிய- ஜனாநயகக் கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா.செந்திவேல் அண்மைய மகசீன் சிறைச்சாலைத் தாக்குதல் பற்றி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளர்.

மேலும் அவ்வாறிக்கையில்,

இலங்கையில் மனித உரிமைகள் பேணப்பட்டு வருவதாகவும் தமிழ் மக்கள் இன மொழி ரீதியில் புறக்கனிக்கப்படவில்லை என்றும் உலக அரங்கில் அரசாங்கம் அழுத்திக் கூறி வருகிறது. சிறைச்சாலை மதில்களில் “ சிறைக் கைதிகளும் மனிதர்களே” என்று அழகாக மூன்று மொழிகளில் எழுதப்பட்டுள்ளன. ஆனால் உள்ளே நடப்பவை மனிதநேயம் அற்ற பேரினவாதத் தாக்குதல்களாகவே இருந்து வருகின்றன என்பது தான் விசனத்திற்கு உரியதாகும்.

1983ம் ஆண்டிலும் அதன் பின்னான ஒவ்வொரு காலப் பகுதியிலும் வெலிக்கடை, களுத்துறை சிறைகளிலும், பிந்துனவ புனர்வாழ்வு நிலையத்திலும் தமிழ் கைதிகள் மிகக் கேவலமாகவும் கொடூரமாகவும் தாக்கப்பட்டு கொல்லப்பட்டனர். இவற்றிற்கு சிறை அதிகாரிகளும் இன வெறிக்கடையர்களும் காரணமாக இருந்தமை ஏற்கனவே விசாரனைகளில் இருந்து வெளிவந்த உண்மைகளாகும். இன்று யுத்தம் முடிந்துள்ள சூழலில் தமிழ்க் கைதிகளைத் தொடர்ந்தும் சிறைகளில் வைத்திருப்தாலேயே இந்தகைய இன வெறிப் பழிவாங்கல்கள் மேற்கொள்ளபடுகின்றன. எனவே நாடத்தப்பட்ட சிறைச்சாலை தாக்குதல்களுக்கு உரிய நீதி விசாரனை மேற்கொள்ளபட வேண்டும். அதே வேளை தமிழ்ச் சிறைக் கைதிகள் கோரிவரும் தம்மை விசாரனை செய்ய வேண்டும் அல்லது விடுதலை செய்ய வேண்டும் என்பதை அரசாங்கம் ஏற்றுக் கொண்டு அதற்குரிய செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்பதை எமது கட்சி மீண்டும் வலியுத்திக் கேட்டுகொள்கிறது.

சி.கா. செந்திவேல்.
பொதுச் செயலாளர்.

Exit mobile version