Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழை வழக்காடு மொழி மௌனம் காக்கிறார் கருணாநிதி – ஜெயலலிதா.

இதுதொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை ஆட்சி மொழியாக ஆக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வழக்கறிஞர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டனர். வழக்கறிஞர்களுக்கு ஆதரவாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் தோழமைக் கட்சிகளுடன், கழக அமைப்பு ரீதியான 45 மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. இதனையடுத்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வு தமிழில் வாதாட வாய்மொழி அனுமதி அளித்துள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வெளி வந்துள்ளது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கும் தகவல் ஆகும். ஆனால், இதைச் செயல்படுத்த வேண்டிய முதலமைச்சர் கருணாநிதி மவுனம் சாதிப்பது கடும் கண்டனத்திற்குரியது. சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழில் வாதாடுவது குறித்து சுற்றறிக்கை வெளியிட வேண்டும் என ஒரு வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்ற முதல் அமர்வு முன்பு வலியுறுத்திய போது, அரசியலமைப்புச் சட்டப்படி வரையறைகள் உள்ளதால், நாங்கள் சுற்றறிக்கை பிறப்பிக்க முடியாது என தலைமை நீதிபதி கூறி இருக்கிறார். இதன் அர்த்தம் என்னவென்றால், இதற்கான உத்தரவை பிறப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகள் தான் என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார். இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 348(2)-ன்படி, குடியரசுத் தலைவரின் முன் அனுமதியுடன் மாநில அலுவல்களுக்காக பயன்படுத்தப்படும் மொழியை அந்த மாநிலத்தின் உயர் நீதிமன்ற நடவடிக்கைகளில் பயன்படுத்த அனுமதிக்கும் அதிகாரம் மாநில ஆளுநருக்கு மட்டுமே உண்டு. 1963-ஆம் ஆண்டு ஆட்சி மொழிகள் சட்டம் பிரிவு 7-ன்படி, ஆங்கிலத்தைத் தவிர, இந்தி மொழியையோ அல்லது அந்த மாநிலத்தின் ஆட்சி மொழியையோ, அந்த மாநிலத்தில் உள்ள உயர் நீதிமன்றத் தீர்ப்புகளில் பயன்படுத்த அனுமதிக்கும் அதிகாரம் மாநில ஆளுநருக்கு மட்டுமே உண்டு. சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை ஆட்சி மொழியாக்க தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் முழு ஆதரவு அளித்துள்ளன. தலைமை நீதிபதி உட்பட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளும் தங்களது முழு ஆதரவை அளித்துள்ளனர். பிகார், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில், அந்தந்த மாநில மொழிகள் உயர் நீதிமன்றங்களில் ஆட்சி மொழியாக்கப்பட்டு தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது. தமிழில் வழக்காடலாம் என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வாய்மொழியாக தனது கருத்தைத் தெரிவித்து இருக்கிறார். தலைமை நீதிபதியின் கருத்து முழு வடிவம் பெற வேண்டுமென்றால், மத்திய அரசை வலியுறுத்தி, தமிழ் நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும். கருணாநிதி இந்த விஷயத்தில் மத்திய அரசை வலியுறுத்தி குடியரசுத் தலைவரின் ஒப்புதலை உடனடியாகப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் மக்களின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

Exit mobile version