Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழுக்கு ஆபத்து ஹிந்தி மொழியல்ல;​ ஆங்கில மொழியால்தான் நிகழும் – ச.தமிழ் செல்வன்

உலகத் தமிழ்ச் செம்மொழி முதல் மாநாடும்,​​ தமிழாசிரியர் நிலையும் என்ற தலைப்பில் மாநில அளவிலான சிறப்பு மாநாடு மதுரையில் ஞாயிற்றுக்கிழமை ​நடைபெற்றது.​ ​ இதில் ச.தமிழ்ச்செல்வன் பேசியது: காங்கிரஸ் கட்சிக்கும் சுதந்திரத்துக்கும் என்ன உறவு உள்ளதோ அதே உறவு போன்றதுதான் தமிழகத்தில் திராவிடக் கட்சிகளுக்கும் தமிழுக்கும் உள்ளது.​ ஆனால் 43 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆட்சியால்,​​ வட்டார வழக்குகள் அகராதிகள் வெளிக்கொணரப்படவில்லை.​ வெளிக்கொண்டுவரப்பட்ட ஒன்றிரண்டு வட்டார வழக்கு அகராதிகளும் தனிப்பட்ட நபர்களின் முயற்சியாலேயே வெளிக் கொண்டு வரப்பட்டுள்ளன. ​ ​ பல்கலைக்கழகங்களிலும்,​​ கல்லூரிகளிலும் மானுடவியல் மற்றும் சமூகவியல் குறித்த இளங்கலைப் படிப்புகள் இல்லை.​ கிராமியப் பாடல்களுக்கும் இதே நிலைதான்.​ இது ஆராய்ச்சி அளவில் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.​ அதேபோல் தமிழ் நாடகங்களுக்கான சிறப்புப் பள்ளிகளும் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை. ​ ​ அடுத்த 10 ஆண்டுகளில் 300 ​ மொழிகள் அழிந்துவிடும் என யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.​ நமது மத்திய அரசின் உலகமயமாக்கல் கொள்கையால் அடுத்த 50 ஆண்டுகளில் இந்தியாவில் மட்டும் தமிழ் உள்பட 200 மொழிகள் அழியும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.​ தமிழுக்கு ஆபத்து ஹிந்தி மொழியல்ல;​ ஆங்கில மொழியால்தான் நிகழும். தமிழகத்தில் தமிழ்வழிக் கல்வியின் தரம் குறைவாக இருப்பதாக அரசே திட்டமிட்டு பரப்பி வருகிறது.​ இது மறைமுகமாக தனியார் பள்ளிகள் வளர்ச்சிக்கான ஆதரவுப் பிரசாரமே.​ இதையும் மீறி தமிழ்வழிக் கல்வியில் படித்த அரசுப் பள்ளி மாணவ,​​ மாணவியர் சாதிக்கும் அளவுக்கு ஆசிரியர்கள் பயிற்றுவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. ​ ​ முதல்வர் கருணாநிதிக்கு எப்போதுமே பிரமாண்டம் என்பது பிடிக்கும்.​ 133 அடி உயரத்தில் திருவள்ளுவர் சிலை அமைத்தது,​​ பிரமாண்டமான வள்ளுவர் கோட்டம்,​​ சட்டப்பேரவைக் கட்டடம் என இதற்குச் சான்று கூறலாம்.​ அதன்படியே தற்போது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடும் நடத்தப்படவுள்ளது என்றார். ​ மாநாட்டுக்கு தமிழ்நாடு தமிழாசிரியர் ஒருங்கிணைப்புக் குழு மாநில ஒருங்கிணைப்பாளர் இதயகீதன் தலைமை வகித்தார்.​ கருமாத்தூர் கல்லூரி தமிழ்த் துறைப் பேராசிரியர் வெ.சுந்தரவள்ளி,​​ எழுத்தாளர் சு.வெங்கடேஷன்,​​ தமிழாசிரியர்கள் நா.முத்துநிலவன்,​​ பிரின்ஸ் கசேந்திரபாபு,​​ காந்திகிராமம் கிராமியப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைப் பேராசிரியர் மு.குருவம்மாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தமிழ்நாட்டில் தமிழை முழுமையாக ஆட்சி மொழியாக்க வேண்டும்,​​ தமிழ் மொழியை இந்தியாவின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக்க வேண்டும். தமிழ்மொழியைப் பயிற்று மொழியாகவும்,​​ பாடமொழியாக்கிடவும் வேண்டும்,​​ காலியாக உள்ள சுமார் 7 ஆயிரம் தமிழாசிரியர் பணியிடங்களை நிரப்பி,​​ புதிய தமிழாசிரியர் பணியிடங்களை உருவாக்கவேண்டும்,​​ கல்லூரிகள்,​​ பல்கலைக்கழகங்களில் போதிய தமிழ் விரிவுரையாளர்களை நியமிக்க வேண்டும். ​ ​ ​ இலங்கைத் தமிழர்களைப் பாதுகாத்து சமஉரிமை வழங்கி சொந்த இடத்தில் குடியமர்த்த வேண்டும்,​​ தமிழ் இலக்கியம் அனைத்தையும் உலகின் பிற மொழிகளில் மொழி பெயர்க்க வேண்டும்,​​ தமிழாசிரியர்களுக்கும் தமிழ்ப் பேராசிரியர்களுக்கும் சிறப்புப் பயிற்சியும்,​​ ஊக்க ஊதியமும் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.​

Exit mobile version