Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழீழத்தை உருவாக்க எண்ணும் இந்தியா! : கெஹெலிய ரம்புக்வல

இலங்கைக்குள் ஒற்றுமையாக வாழ்வதே அனைத்து இன மக்களினதும் எதிர்பார்ப்பாகும். இந்நிலையில் நாட்டை இரண்டாக கூறுபோட்டு தனித் தமிழீழத்தை உருவாக்குவதான இந்தியாவின் எண்ணம் இலங்கை வாழ் தமிழர்களிடம் இல்லை என்று தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்காக பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வல தெரிவித்தார்.

இலங்கையில் பெரும்பான்மை இனத்தவர்களிற்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளைப் போன்று சமமான முறையில் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில், அவர்களுக்கு நிர்வாக அதிகாரத்தை வழங்க வேண்டும். இந்த முயற்சி தோல்வி அடைந்தால், தமிழர்கள் கண்ணியத்துடன் வாழ ஏதுவாக அவர்களுக்கென தனி மாநிலம் அமைக்க வலியுறுத்தப்படும் என்று அ.தி.மு.க.வின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறித்து கருத்து கேட்ட போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் கூறியதாவது

நாட்டை இரண்டாகக் கூறுபோட்டு மற்றுமொரு அரசாங்கத்தின் அதிகாரத்தின் கீழ் செயற்பட நம்நாட்டுத் தமிழ் மக்கள் ஒருபோதும் விரும்பவிலலை. அவர்களுக்குத் தேவை ஐக்கிய இலங்கைக்குள் சுதந்திரமான வாழ்வு மட்டுமேயாகும். இதனை எமது அரசாங்கம் இன்னும் ஓரிரு நாட்களில் நனவாக்கிவிடும். அந்த நம்பிக்கை மக்களுக்கும் உண்டு.

இந்நிலையில் அ.தி.மு.க.வின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு தமிழ்ப் பகுதிகளை புதுப்பிக்கவும் மேம்படுத்தவும் இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்காகவும் மானியமாக வழங்கப்படவுள்ள 10ஆயிரம் கோடி ரூபாவை இப்பொழுதே அரசாங்கத்திடம் வழங்க அக்கட்சி நடவடிக்கை எடுக்க முடியும்.

காரணம் எமது அரசாங்கம் சிங்களம் தமிழ் என்ற பேதமின்றியே தமது நடவடிக்கைகளைக் கையாண்டு வருகின்றது. அந்தவகையில் அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள அபிவிருத்தி நடடிக்கைகளுக்கு அந்தப் பணம் உதவியாக இருக்கும்.

இதேவேளை இலங்கை இந்திய ஒப்பந்தத்தின்படி உருவாக்கப்பட்ட 13ஆவது அரசியலமைப்பு சீர்த்திருத்தம் தற்போது நடைமுறையில் உள்ளது. அதில் குறைபாடுகள் இருப்பின் நிவர்த்தி செய்துகொண்டு அதற்கேற்றவாறு –அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.

Exit mobile version