Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழினத்தைப் பூண்டோடு அழிக்க 5000 கோடி : வை.கோ

வைகோவின்  அறிக்கை:

ஈழத்தமிழ் இனத்தை நிரந்தர அடிமை இருளில் நசுக்கத் திட்டமிட்டு உள்ள ராஜபக்சேவுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் கோலாகல வரவேற்பு. ஏழு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாம். சிங்கள அரசுடன், டெல்லி போட்ட ஒப்பந்தங்கள்.

டெல்லி ராஜகட்டத்தில் காந்தியார் கல்லறையில், ‘ஏழு பாவங்கள்’ என்று எழுதப்பட்டு இருக்கிறது. அத்தகைய பாவச் செயல்களை, இந்திய அரசு செய்து உள்ளது.

ஈழத்தமிழ்ப் பெண்களை மிகக் கொடூரமாகக் கற்பழித்துக் கொன்று எரித்த கோர நிகழ்ச்சிகளை நினைக்கும்போதே நெஞ்சை அடைக்கிறது. இத்தகைய சிங்கள ராணுவத்துக்கும், காவல்துறைக்கும்தான் இந்தியாவில் நவீனப் பயிற்சிகளாம்! இலங்கையில் மின்சார உற்பத்தி ஆயிரம் கோடி ரூபாயும், ரெயில்வே உள்ளிட்ட மற்ற திட்டங்களுக்கு 4,000 கோடி ரூபாயும் கொடுக்க, இந்தியா ஒப்புக் கொண்டு உள்ளது. ஏற்கனவே, ராடார்கள் உள்ளிட்ட ஆயுதங்களையும், ஆயிரம் கோடி ரூபாயையும் இந்தியா கொடுத்து இருக்கிறது.

தமிழ் இனத்தைப் பூண்டோடு அழிக்கக் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படும் ராஜபக்சேவுக்கு இப்பொழுது, மேலும் 5,000 கோடி ரூபாயைக் கொடுப்பது, ஈழத்தமிழர்களுக்கு மட்டும் அல்ல, தமிழகத்துக்கும், இந்தியாவுக்குமே எதிர்காலத்தில் பெருங்கேடாக முடியும்.

சீனாவும், பாகிஸ்தானும் இலங்கையில் கால் ஊன்ற விடாமல் தடுப்பதற்கு என்று சொல்லிக்கொண்டே, இந்தியா இலங்கைக்கு பல்லாயிரம் கோடி உதவியும், ராணுவ உதவிகளும் செய்வது மிகவும் தவறான நடவடிக்கை ஆகும். இந்தியாவிடம் இருந்து எல்லாவற்றையும் பெற்றுக்கொண்டே, எதிர்காலத்தில், சீனாவும், பாகிஸ்தானும், இலங்கையில் பலத்த அடித்தளம் அமைக்க, ஏற்பாடு செய்யப்போவது ராஜபக்சேதான்.

இலங்கைத் தீவில் தமிழ் ஈழம் அமைவதும், ஈழத்தமிழர்கள் வலுப்பெறுவதும் மட்டும்தான் தாய்த் தமிழகத்துக்கு மட்டும் அல்ல, இந்தியாவுக்கே பாதுகாப்பு அரணாக அமையும்.

பிரபாகரனின் தாய், பார்வதி அம்மையார் தமிழக மண்ணில் கால் எடுத்து வைக்கக்கூட அனுமதிக்காத இந்திய அரசு, தமிழ்நாட்டில் 1986-ம் ஆண்டு நவம்பர் 1-ல் ஒரு தலித் இளைஞன் திருநாவுக்கரசை சுட்டுக்கொன்ற கொலைக் குற்றவாளி டக்ளஸ் தேவானந்தாவுக்கு, வரவேற்புக் கொடுப்பதும், அவரோடு பிரதமர் மன்மோகன்சிங் கைகுலுக்குவதும், தமிழர்களின் தன்மானத்துக்கு இந்திய அரசு விடுக்கின்ற சவால் என்று வைகோ கூறியுள்ளார்.

Exit mobile version