Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் ஆர்வம் கொழும்பிடம் இல்லை:அமெரிக்க செனட் உப குழுத் தலைவர் பொப்காசே குற்றச்சாட்டு.

26.02.2009.

வாஷிங்டன்: இலங்கையில் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண வேண்டும் என்ற ஆர்வம் கொழும்பிடம் இல்லையென்று அமெரிக்க செனட்டின் வெளியுறவு உப குழுவின் தலைவரான செனட்டர் பொப்காசே நேற்று முன்தினம் செவ்வாய்க் கிழமை குற்றச்சாட்டுத் தெரிவித்திருக்கிறார்.

வடக்கில் புலிகளை அழித்து விட்டாலும் கூட தமிழ் மக்களின் விவகாரங்கள் தொடர்பாக அரசியல் இணக்கப்பாடொன்றை எட்டுவது தொடர்பாக கொழும்பு தீவிரமாக இல்லையென்று பொப் காசே தெரிவித்திருக்கிறார்.

அரசியல் ரீதியாக இந்த விடயம் விரைவில் கையாளப்படுமென்பது தொடர்பாக இதுவரை சில விடயங்களே முன்வைக்கப்பட்டுள்ளன. விடுதலைப் புலிகளுடன் இலங்கை நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தாது. தமிழ் தரப்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் மாற்றீட்டை கண்டு பிடிப்பதில் அரசாங்கம் அதிகளவு ஆர்வம் காட்டுவதாக தோன்றவில்லை. தமிழ் மக்களும் புலிகளுக்கு மாற்றீடாக நம்பகரமானவர்களை முன்வைப்பதில் ஆர்வமாக இருப்பதாகத் தென்படவில்லை என்று பொப்காசே கூறியுள்ளார்.

அண்மித்த கிழக்கு, தெற்கு, மத்திய ஆகிய விவகாரங்களுக்குப் பொறுப்பான செனட் உபகுழுவின் தலைவரான பொப்காசே, இலங்கையின் அண்மைய நிலைவரங்கள் தொடர்பான செனட் உபகுழு விசாரணையின் போதே இக்கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கமானது பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தமாக, புலிகளுக்கு எதிரான யுத்தமாக இதனை வரையறைப்படுத்துகின்றது. அங்கு பல தசாப்தங்களாக சிறுபான்மை தமிழர்களுக்கும் பெரும்பான்மை சிங்களவர்களுக்கும் இடையில் பரந்தளவில் இன நெருக்கடியுள்ளது.

இருதரப்பும் அரசியல் இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும். யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். இலங்கையின் தேசிய அரசாங்கத்தில் போதிய பிரதிநிதித்துவம் இல்லாமல் தமிழ் மக்கள் தொடர்ந்து படிமுறை ரீதியாக பாரபட்சத்திற்குள்ளாக்கப்படுகின்றனர். தமிழ்ப் புலிகள் திரும்பவும் தலைமறைவாகி பயங்கரவாத நடவடிக்கைகளை முன்னெடுக்கக் கூடும். இது மற்றொரு வன்முறை சூழல் வட்டமாகிவிடக் கூடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Exit mobile version