Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழர்கள் பட்டினியால் சாவதை தடுக்க ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்

இலங்கையில் தமிழர்கள் பட்டினியால் சாவதை தடுக்கும் வகையில் சமைத்த உணவு, காய்கறிகள், தண்ணீர் பாக்கெட்டுகளை விமானம் மூலம் முகாம்களில் உள்ள தமிழர்களுக்கு போட இராணுவம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
இதுவரை செய்த வரலாற்று பிழைகளுக்கு பிராயசித்தமாக இந்த மனிதாபிமான நடவடிக்கையை உடனே மேற்கொள்ள வேண்டும் என்று‌ம் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொட‌ர்பாக அவர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அறிக்கையில், ”இலங்கை இராணுவம் இலங்கைத் தமிழர்கள் மீதான இனவெறித் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. உணவு, குடிநீர் போன்றவைகள் கிடைக்காமல் இலங்கைத் தமிழர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மருத்துவமனைகளின் மீதும் இலங்கை இராணுவத்தினர் கடும் தாக்குதலை நடத்தி வருகின்றனர். பலத்த காயமடைந்த மக்கள் மருத்துவ வசதியின்றி தவிக்கின்றனர்.

இலங்கை அரசின் இந்த இனவெறித் தாக்குதலை ஐக்கிய நாடுகள் சபை, செஞ்சிலுவை சங்கம் ஆகியவை கடுமையாக கண்டித்துள்ளன. அப்பாவி இலங்கைத் தமிழர்கள் மீது குண்டுகளை வீச வேண்டாம் என அமெரிக்க அதிபர் கூட இலங்கை அதிபரை வற்புறுத்தியிருக்கிறார்.

தமிழன் என்று தன்னைத்தானே தம்பட்டம் அடித்துக் கொள்ளும் தி.மு.க தலைவர் கருணாநிதியும், மத்திய அரசாங்கமும் இலங்கையில் நாங்கள் போர் நிறுத்தம் செய்து விட்டோம் என்று நயவஞ்சக நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறார்களே தவிர, தமிழர்கள் மீது அவர்களுக்கு உண்மையான அக்கறை இல்லை.

இலங்கையில் போரை நிறுத்த வேண்டும். தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும். எத்தனையோ தலைமுறைகளாக அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை அமைத்துத் தரும் வகையில் பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும். அந்தத் தீர்வு நிரந்தரத் தீர்வாக இருக்க வேண்டும் என்ற உளப்பூர்வமான சிந்தனை கருணாநிதிக்கும், அவரைச் சார்ந்தவர்களுக்கும் சிறிதும் இல்லை. இலங்கை அதிபரோ யார் சொன்னாலும் போரை நிறுத்தப் போவதில்லை என்று கூறி வருகிறார்.

போரில் எவ்வளவு தமிழர்கள் மடிந்தார்களோ அதைவிட பல மடங்கு தமிழர்கள் பசியால், பட்டினியால் செத்து மடிவார்கள் என்று அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் முகாம்களில் விமானத்தில் இருந்து உணவுப் பொட்டலங்களைப் போட, இந்திய இராணுவம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இந்திய இராணுவம் எவ்விதத் தயக்கமும் இன்றி, சமைத்த உணவையும், காய்கறிகளையும், பழங்களையும், தண்ணீர் பாக்கெட்டுகளையும், தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் முகாம்களில் ஏர் டிராப் செய்ய, அதாவது விமானம் மூலம் வானத்தில் இருந்து போடுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லையென்றால், எங்கள் சொந்த உறவான தமிழர்கள் ஆயிரக்கணக்கானோர் பட்டினிச் சாவிற்கு உள்ளாக நேரிடும்.

எனவே எனது இந்த வேண்டுகோளை புறந்தள்ளாமல், கால தாமதம் ஏதும் இன்றி நடவடிக்கை எடுத்து, தமிழர்களைக் காப்பாற்ற, மத்திய அரசு முன்வர வேண்டும். இதுநாள்வரை செய்த வரலாற்றுப் பிழைகளுக்கு ஒரு பிராயச்சித்தமாக இந்த மனிதாபிமான நடவடிக்கையை இந்திய இராணுவம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக மக்களின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” எ‌ன்று ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.

Exit mobile version