Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழர்கள் செறிந்துவாழும் இரண்டு மாகாணசபைகளிலும் சமஸ்டி அடிப்படையில் உரிமைகள் வழங்கப்பட வேண்டும்: ப.சிதம்பரம்

இலங்கை பிரச்சினை இராணுவத்தால் தீர்க்க முடியாது. பேச்சுவார்த்தை மூலமே இது தீர்த்துவைக்கப்பட வேண்டும். ஏனைய சமூகத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் சம உரிமைகள் தமிழர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். தமிழர்கள் செறிந்துவாழும் இரண்டு மாகாணசபைகளிலும் சமஸ்டி அடிப்படையில் உரிமைகள் வழங்கப்பட வேண்டும். மோதல்களை நிறுத்துமாறு இந்தியா தொடர்ச்சியாக விடுத்துவந்த கோரிக்கையை விடுதலைப் புலிகளும், இலங்கை அரசாங்கமும் மதிக்கவில்லையென இந்திய உட்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக மோதல்களை நிறுத்துமாறு தாம் இலங்கை அரசாங்கத்திடமும், விடுதலைப் புலிகளிடமும் தொடர்ச்சியாக் கோரிக்கை விடுத்ததாக அவர் குறிப்பிட்டார்.

எனினும், இராணுவ ரீதியான தீர்வொன்றைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் கொழும்பே கூடுதலான குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளது என லோக்சபா தேர்தலுக்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்தபின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த சிதம்பரம் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, இலங்கையில் போர்நிறுத்தத்தை வலியுறுத்தக் கோரி திராவிட முன்னேற்றக் கழகத்தால் இன்று வியாழக்கிழமை நடத்தப்படும் வேலைநிறுத்தப் போராட்டம் குறித்துக் கருத்துத் தெரிவித்த மத்திய உட்துறை அமைச்சர்,
“இந்த வேலைநிறுத்தப் போராட்டம் மத்திய அரசாங்கத்துக்கு எதிரானது அல்ல. இலங்கையில் பாதிக்கப்பட்டிருக்கும் அப்பாவித் தமிழ் மக்களுக்குத் தீர்வுகிடைக்க வலியுறுத்தியே இது நடத்தப்படுகிறது” என்றார்.

அத்துடன், இலங்கை மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர மத்திய அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையென்ற குற்றச்சாட்டுப் பிழையானது எனவும் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இந்திய லோக்சபா தேர்தல் பிரசாரங்களில் இலங்கை இனப்பிரச்சினை விடயம் ஒரு முக்கிய இடத்தை வகித்துள்ளது. அண்மையில் தனியார் தொலைக்காட்சியொன்றுக்குப் பேட்டியளித்திருந்த தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி, விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் தனது நண்பன் எனக் கூறியிருந்தார். அதன் பின்னர் அதனை மறுத்திருந்தார்.

எனினும், தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதியின் இந்தக் கருத்து தனிப்பட்ட கருத்து எனவும், காங்கிரஸ் கட்சி தனியான கொள்கையைக் கொண்டிருப்பதாகவும் காங்கிரஸ் பேச்சாளர் அறிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Exit mobile version