Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழர்கள் அழிக்கப்படுகிறார்கள் : மு.கருணாநிதி

இல‌ங்கை‌த் த‌மிழ‌ர் ‌பிர‌ச்சனை‌யி‌ல் மத்திய அரசு வேகமாக முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. மத்திய அரசு தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஒரு தமிழனின் பிணம் விழுகிறது எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி வேதனை தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

செ‌ன்னை அ‌ண்ணா அ‌றிவாலய‌த்த‌ி‌ல் இ‌ன்று நடைபெ‌ற்ற தி.மு.க பொதுக்குழுவில் கட்சியின் தலைவராக 10வது முறையாக போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுத்ததற்கு பொதுக்குழு உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் கருணாநிதி பேசுகையில், நான் மீண்டும் தலைவராகி உள்ள இந்த நேரத்தில் இலங்கைத் தமிழர்கள் அங்கு செத்து மடிந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை காப்பாற்ற வேண்டியதுதான் முக்கியமான பிரச்சனை. அதற்காக குறுக்கு வழியிலோ, வன்முறை மூலமாகவோ, தேச விரோதமாக செயல்பட்டோ அதை அடைய விரும்பவில்லை எ‌ன்றா‌ர்.

மத்திய அரசு எடுக்கும் முடிவை ஏற்றுக் கொள்வோம், என்றாலும் மத்திய அரசு வேகமாக முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. மத்திய அரசு தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஒரு தமிழனின் பிணம் விழுகிறது எ‌ன்று கருணா‌நி‌தி வேதனை தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

ஏற்கனவே நானும் மற்றக் கட்சி தலைவர்களும் சந்தித்த போது அளித்த உறுதிமொழியை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்று பொதுக்குழுவிலும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம் எ‌ன்று ‌நினைவு‌ப்படு‌த்‌திய கருணா‌நி‌தி, மத்திய அரசு இதற்கு மதிப்பு அளிக்க வேண்டும் என்று உருக்கமாக வேண்டுகோள் விடு‌த்தா‌ர்.

இலங்கை‌த் தமிழர்களுக்காக வாதாடுவதை சிலர் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக சொல்லி வக்கிரப் புத்தியுடன் நடந்து கொள்கிறார்கள். அவர்களை புறம் தள்ளி இலங்கை‌த் தமிழர்களை காப்பாற்ற அனைவரும் உறுதி ஏற்போம், இலங்கை‌த் தமிழர்களுக்காக எதையும் துறப்போம், தேவைப்பட்டால் உயிரையும் துறப்போம் என்று முதலமைச்சர் கருணாநிதி ஆவேசமாக பேசினார்.

இலங்கை தமிழர் பிரச்சனையில் இளம் தலைவர் ராஜீவ்காந்தியின் மறைவுக்கு பிறகு, மறைவுக்கு முன்பு என்று இரண்டு பிரிவாக பார்க்க வேண்டுமென்று நான் கூறி இருக்கிறேன். இன்றைக்கு இலங்கையிலே தமிழர்கள் போர் காரணமாக இன்னமும் துன்பத்தை அனுபவித்து வருகிறார்கள்.

இதனால் தமிழ்நாட்டு தமிழர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் வாழும் கோடிக்கணக்கான தமிழர்கள் மனதில் ரணம் ஏற்பட்டிருக்கிறது. அவர்களுடைய ரணத்தை ஆற்ற வேண்டிய பொறுப்பு அவர்களுடைய புண்ணுக்கு மருந்து போட வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உண்டு என்று நான் உருக்கமான வேண்டுகோளை விடுக்கிறேன். இந்த கோரிக்கையை ஏற்று இலங்கைத் தமிழர்களை மத்திய அரசு காப்பாற்ற வேண்டும். இதற்காக செய்ய வேண்டியதை செய்ய வேண்டும் என்று மத்திய அரசை பணிவாகவும், உரிமையோடும் கேட்டுக்கொள்கிறேன்.

இதன் பிறகாவது மத்திய அரசு மனம் இறங்கி இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்று நிறைவேற்றப்பட்ட பல்வேறு தீர்மானங்களில் இதனையே முக்கிய தீர்மானமாக கருதி மத்திய அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருணாநிதி வே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்தா‌ர்.

Exit mobile version