Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழர்களை பொலிஸ் அணியில் சேர்க்காமல், தமிழ் பெண்களை இராணுவ படையில் சேர்ப்பது நல்லிணக்க செயற்பாடு அல்ல : மனோ கணேசன்

கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு தொகை தமிழ் பெண்களை இராணுவத்தில் சேர்த்து கொண்டுள்ளதாக இலங்கை இராணுவம் சொல்லுகிறது. இதையடுத்து யாழ் மாவட்டத்திலிருந்தும் மேலும் பல பெண்களை இராணுவத்தில் சேர்த்துக்கொள்ள உள்ளதாக யாழ் இராணுவ தளபதி மகிந்த ஹத்துருசிங்க சொல்லியுள்ளார். தமிழர்களை இணைத்து கொள்வதன் மூலம் தனி சிங்கள இராணுவம் என்ற நிலையை மாற்றி அதை இலங்கை இராணுவமாக உருவாக்க போவதாகவும் இதற்கு இவர் விளக்கம் அளித்துள்ளார். ஆகவே, போர் நடத்தியதும் இப்போது இருக்கும் சிங்கள இராணுவம்தான் என்பது இதன்மூலம் தெளிவாகியுள்ளது. இன்று இருப்பது இலங்கை இராணுவம் இல்லை; இருப்பது தனி சிங்கள இராணுவம்தான் என்ற உண்மையை போட்டு உடைத்த அவருக்கு நன்றி.

ஆனால், தமிழர்களின் இன்றைய முதல் தேவை யுத்தம் செய்யும் இராணுவம் இல்லை. சட்டம், ஒழுங்கு ஆகிய சிவில் பணிகளை முன்னெடுக்கும், இலங்கை பொலிஸ் திணைக்களம்தான் தமிழர்களுக்கு தேவை என கொழும்பில் இன்று, “அதிகாரத்தை பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்துவோம்” என்ற தொனிப்பொருளில் நடத்தப்பட்ட ஊடக மாநாட்டில் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இம்மாநாட்டில் தொடர்ந்து கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

பெண்களை மாத்திரம் சேர்ப்பதன்மூலம், ஹத்துருசிங்க தனி பெண்கள் இராணுவம் அமைக்க போகிறாரோ தெரியவில்லை. தமிழர்களுக்கு ஆண்கள் இராணுவமும் வேண்டாம், பெண்கள் இராணுவமும் வேண்டாம். தமிழர்களின் இன்றைய முதல் தேவை யுத்தம் செய்யும் இராணுவம் இல்லை. தமிழர் உட்பட நாட்டு மக்களின் நாளாந்த வாழ்வுடன் நேரடி சம்பந்தம் கொண்ட சட்டம், ஒழுங்கு ஆகிய சிவில் பணிகளை முன்னெடுக்க கூடிய இலங்கை பொலிஸ் திணைக்களம்தான் இன்று நமக்கு தேவை.

தமிழர்களை பெருமளவு இணைத்து கொள்வதன் மூலம் இன்று இருக்கும் சிங்கள பொலிஸ், இலங்கை பொலிஸாக மாறவேண்டும். தமிழர் கணிசமாக வாழும் வடக்கு, கிழக்கு, கொழும்பு, மலையகம் ஆகிய பகுதிகளில் தமிழ் பொலிஸ் அதிகாரிகளை பணிகளில் அமர்த்த வேண்டும். குறிப்பாக வட, கிழக்கு மாகாணங்களில் தமிழ் போலீசார் பெரும்பான்மையாக ஒவ்வொரு பொலிஸ் நிலையங்களிலும் பணியாற்றும் காலம் வர வேண்டும்.

தமிழர்களையும் உள்வாங்கி இலங்கை பொலிஸ் வடக்கு, கிழக்கில் சட்டம், ஒழுங்கு சிவில் பணிகளை பொறுப்பேற்க வேண்டும். இன்றைய தனி சிங்கள இராணும் சிவில் பணிகளில் தலையிடுவதை நிறுத்திவிட்டு, வடக்கில் தான் ஆக்கிரமித்து இருக்கும் நிலங்களை கையளித்து விட்டு, யுத்த காலத்தில் அமைக்கப்பட்ட புதிய முகாம்களை மூடிவிட்டு தமது சொந்த ஊர்களுக்கு திரும்பி செல்ல வேண்டும்.

இதுதான் செய்ய வேண்டிய வேலை. இதை செய்வதைவிட்டு விட்டு, தமிழ் கட்சிகளுக்கு இராணுவத்தை பார்த்து திருந்துங்கள் என்று அறிவுரையும் ஹத்துருசிங்க கூறியுள்ளார். இவருக்கு ஏன் இந்த தேவை இல்லாத வேலை என்று தெரியவில்லை. செய்ய வேண்டியவைகளை விட்டு, விட்டு செய்ய கூடாதவைகளை செய்வது இலங்கை இராணுவத்துக்கும், இந்த இராணுவத்துக்கு ஆணையிடும் அரசியல் தலைமைகளுக்கும் கை வந்த கலை.

இதை நான் ஹத்துருசிங்கவுக்கும், அவருக்கு ஆணையிடும் கனவான்களுக்கும் நல்லெண்ணத்துடன் சொல்கிறேன். இராணுவத்தில் நமது பெண்களை இணைப்பதை நிறுத்துங்கள். தமிழர்களை பொலிஸ் திணைக்களத்தில் இணையுங்கள். இதன்மூலம்தான் உண்மையான தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும். இதைதான், உங்களது கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழு அறிக்கை சிபாரிசுகளும் சொல்கின்றன. கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழு, இராணுவ பிரசன்னத்தை வடக்கு, கிழக்கில் இருந்து குறைக்க சொல்கிறது. பொலிஸ் என்பது ஒரு ஆயுத படையல்ல. அது ஒரு சிவில் திணைக்களம் என்பதால், அதை கடந்த காலங்களைப்போல் பாதுகாப்பு அமைச்சிலிருந்து விடுவித்து, உள்துறை அமைச்சில் இணைக்க சேர்க்க வேண்டும் என்றும் கற்றுக்கொண்ட ஆணைக்குழு சொல்கின்றது.

பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க

பிரதம நீதியரசருக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து நாட்டின் முன் உள்ள சர்வாதிகார சவால். இதை நான் விளக்குகிறேன். நமது நாட்டில் ஒருவர் சட்டத்தை மீறி குற்றம் இழைத்தால், அவரை பொலிஸ் கைது செய்து விசாரிக்கிறது. பின்னர், பொலிஸ் திணைக்களம் அவர் மீதான விசாரணை அறிக்கையை சட்ட மாஅதிபர் திணைக்களத்துக்கு வழங்குகிறது. சட்ட மாஅதிபர் திணைக்களம் பொலிஸ் விசாரணை அறிக்கையை அடிப்படையாக கொண்டு குற்றப்பத்திரிக்கையை தயாரித்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கிறது. இதுதான் நடைமுறை.

இன்று பொலிஸ் திணைக்களம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் கீழ் வருகிறது. கடந்த காலங்களில் நீதி அமைச்சின் கீழ்தான் சட்ட மாஅதிபர் திணைக்களம் இருந்தது. ஆனால், இன்று நீதியமைச்சர் எனது நண்பர் ரவுப் ஹக்கீமின் நீதியமைச்சின் கீழே சட்ட மாஅதிபர் திணைக்களம் இல்லை. அதுவும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் கீழ் வருகிறது. இனி எஞ்சி இருப்பது, நீதிமன்றம் மட்டும்தான். எனவே பொலிஸ் திணைக்களம், சட்ட மாஅதிபர் திணைக்களம், நீதிமன்றம் என்று வரிசையாக எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கத்தான், பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க மீது குற்றப்பத்திரிக்கை என்பதை தமிழ் பேசும் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதற்குதான் நமது தமிழ் பேசும் எம்பீக்களும் சேர்ந்து கையெழுத்திட்டுள்ளார்கள்.

சிரானிக்கு எதிராக குற்றப்பத்திரிக்கையை சபாநாயகருக்கு வழங்கிய புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னாண்டோ எனது நண்பர். குற்றப்பத்திரிக்கையில் என்ன சொன்னாலும், உண்மையில், திவிநேகும சட்டமூலம் தொடர்பில் நாம் தாக்கல் செய்த வழக்கில் சிராணி பண்டாரநாயக்க வழங்கிய தீர்ப்பின் காரணமாகவே அவர்மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கிறது என்ற உண்மையை அருந்திக பெர்னாண்டோ எம்பி பகிரங்கமாக போட்டு உடைத்துவிட்டார். மக்களுக்கு உண்மையை எடுத்து சொன்ன அவருக்கு நன்றி. இதோ, அதோ என வெகு சீக்கிரம் வரவிருக்கும் அமைச்சரவை மாற்றத்தின்போது அருந்திக பெர்னாண்டோவுக்கு நல்ல ஒரு அமைச்சர் பதவி கிடைக்க வேண்டும் என நான் வாழ்த்துகிறேன்.

Exit mobile version