கொழும்பு மாவட்டக் கிளையின் தலைவராக மூத்த சட்டத்தரணி கே.வி.தவராஜாவும், செயலாளராக மூத்த ஊடகவியலாளர் என்.வித்தியாதரனும், பொருளாளராக எஸ்.சிவலோகநாதனும் தெரிவு செய்யப்பட்டனர்.
கொழும்பு பம்பலப்பிட்டி, றிட்றீட் அவெனியூவில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகத்தில் கடந்த 18ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்ற இந்த அங்குரார்ப்பணக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், சி.ஸ்ரீதரன் மற்றும் தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கொழம்பு மாவட்டக் கிளையின் துணைத் தலைவர்களாக சி.இரத்தினவடிவேல், மா.தேவராஜா ஆகியோரும், துணைச் செயலாளராக கே.உதயகுமாரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சுமந்திரன் எம்.பி உட்பட ஒன்பது பேர் செயற்குழுவுக்குத் தெரிவாகினர்.
தமிழரசுக் கட்சி உறுப்பினர்களை பதிவு செய்து, கொழும்பு மாவட்டக் கிளையை விரிவுபடுத்தி, செயலூக்கப்படுத்துவது என்றும் -கொழும்பு மாவட்டத்தில் கட்சியின் செயற்பாடுகளைப் பலப்படுத்தும் வகையில் மாதாந்த சந்திப்புகள், கூட்டங்கள், ஒன்றுகூடல்கள் போன்றவற்றை நடத்துவது என்றும்
கடந்த வருடம் போன்று இம்முறையும் தலைநகரில் தந்தை செல்வா நினைவு தினக் கூட்டத்தை உரிய அளவில் ஏற்பாடு செய்வது என்றும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
கொழும்பு மாவட்டக் கிளையில் தலைவராகத் தேர்வாகியிருக்கும் சட்டத்தரணி கே.வி.தவராஜா, தமிழ் இளைஞர்களுக்கு எதிராகப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட பல வழக்குகளில் தமிழ் இளைஞர்களுக்காக ஆஜராகி வாதாடி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
செயலாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள என்.வித்தியாதரன் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் என்பதும் தமிழர் உரிமைப் போராட்டத்துக்காக பல வருடங்களாகக் களத்திலிருந்து துணிச்சலுடன் குரல் எழுப்பி வருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கே.வி.தவராஜா இன் மனைவி ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு உறுப்பினர் என்பது சொல்லப்படாத தகவல். மறுபக்கத்தில் சுமந்திரன் ஐக்கிய தேசியக் கட்சி உடன் நெருக்கமான உறவுகளைப் பேணி வருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பேரினவாதக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை மகிந்த ராஜபக்சவுடன் நட்புரீதியான உறவுகளைப் பேணிவருகிறது என்பது மற்றொரு விடயம்.