ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தூத்துக்குடி கடற்கரையிலிருந்து முல்லைத்தீவு நோக்கி 14 வழக்குரைஞர்கள் கள்ளத்தோணியில் புறப்பட்டனர். 14 பேரையும் தமிழக கடலோர காவல்துறையினர் கைது செய்தனர்.
இன்று நண்பகல் 12.30 மணியளவில் தூத்துக்குடி கடற்கரையிலிருந்து மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர் சுப.இராமச்சந்திரன் தலைமையில் 14 வழக்கறிஞர்கள் இந்திய தமிழக அரசின் கட்டுப்பாட்டை உடைத்துவிட்டு முல்லைத்தீவினை நோக்கி படகு பயணம் மேற்கொண்டனர்.
தமிழக நேரப்படி நண்பகல் 1.30 மணியளவில் 13 கடல் மைல் தொலைவில் சென்று கொண்டிருந்தனர். வழக்குரைஞர்கள் 14 பேரும்,தூத்துக்குடி மற்றும் கரூரைச் சேர்ந்தவர்கள்.
தூத்துக்குடி துறைமுகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதால், வழக்கறிஞர்கள் 14 பேரும் தூத்துக்குடிக்கு முன்பு 3 கி.மீ. தொலையில் இருந்து ஒரு கள்ளத் தோணியில் புறப்பட்டனர்.
முல்லைத்தீவு நோக்கி சென்று கொண்டிருந்த முருகையனை தொடர்பு கொண்டு பேசியபோது, நாங்கள் இன்னும் இரண்டு மணி நேரத்தில் முல்லைத்தீவு சென்று விடுவோம் என்று தெரிவித்தார்.
வக்கீல்கள் முல்லைத்தீவு பயணம் செய்வதை அறிந்த கடலோர காவல்படையினர் அவர்களை பிடிக்க விரைந்தனர். நடுக்கடலில் சுற்றி வளைத்த கடலோர காவல்படையினர் அவர்களை கைது செய்தனர்.
ஈழத்தமிழர்களுக்காக தமிழக வக்கீல்கள் முல்லைத்தீவு பயணம் மேற்கொண்டுள்ள செய்தி தமிழகம் முழுவதும் உள்ள வழக்கறிஞர்களிடையே பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.