Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழக மீனவர் தாக்குதல் : பொதுவுடைமைக்கட்சி கண்டனப் பேரணி

தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு சார்பில் நாளை கண்டன ஊர்வலம் நடக்கிறது. இது குறித்து இந்திய கம்னிஸ்டு கட்சியின் நாகை மாவட்ட செயலாளர் செல்வராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தின் பாக்ஜலசந்தி, மன்னார்வளைகுடா ஆகிய பகுதிகளில் தமிழக மீனவர்கள் நமது எல்லையில் மீன்பிடிக்கும் போது இலங்கை இராணுவத்தால் தொடர்ந்து துப்பாக்கிச் சூட்டுக்குள்ளாகிறார்கள். 

கடந்த மாதம் செருதூரில் இருந்து 3 மீனவர்கள் மாயமாகி உள்ளனர். ஆறுகாட்டுத்துறையில் 2 மீனவர்களை சுட்டுக் கொன்று உள்ளனர். தமிழக மீனவர் நலன் காக்க இந்திய கம்னிஸ்டு கட்சி மீனவர்களின் வாழ்வுரிமை இயக்கம் மூலம் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறது.

தமிழக அரசு மத்திய அரசுக்கு எடுத்துக்கூறி தாக்குதலை நிறுத்த வேண்டும். இது வரை இலங்கை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படவில்லை. அனைத்தும் அரசியல் மோசடியாக உள்ளது. மீனவர்களை பாதுகாக்க நடவடிக்கை இல்லை. இலங்கை தமிழர்களுக்காக நிவாரண நிதி தமிழகத்தில் திரட்டப்படுகிறது. இதனால் இலங்கை அரசு காழ்ப்புணர்ச்சி ஏற்பட்டு உச்சகட்ட தாக்குதலை நடத்தி வருகிறது.

நாளை (வெள்ளிக்கிழமை) இலங்கை தமிழர் நலன் காக்கவும், போரை நிறுத்தக்கோரியும் உப்பு சத்தியாகிரகம் நடைபெற்ற அகஸ்தியன்பள்ளியில் இருந்து கோடியக்கரை வரை 110 கிலோ மீட்டர் தூரம் பேரணி நடத்தி முடிவில் கோடியக்கரையில் உள்ள கப்பற்படை முகாம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். போராட்டத்தில் மாநில துணைச்செயலாளர் பழனிச்சாமி, திருவாரூர் மாவட்ட செயலாளர் வீரசேனன் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாவட்ட நிர்வாகக் குழுவை சேர்ந்த இளங்கோவன், நகர செயலாளர் மாரியப்பன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Exit mobile version