Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தாக்குதல் : தொடரும் பயங்கரவாதம்

இராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச்சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீண்டும் தாக்கியுள்ளனர். அவர்களிடம் இருந்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மீன்களையும் பறித்துச் சென்றுள்ளனர். தாக்குதலில் மீனவர் ஒருவரின் மண்டை உடைந்தது. படகுகளும் சேதமடைந்துள்ளன.
இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது:
இராமேஸ்வரத்தில் இருந்து 650 க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் திங்கட்கிழமை அதிகாலை மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.
தனுஷ்கோடிக்கும், கச்சதீவுக்கும் இடையே அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது 16க்கும் மேற்பட்ட அதிநவீன படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை தாக்கிவிட்டு அவர்களிடம் இருந்த மீன்களையும், வலைகள், கருவிகளையும் பறித்துச் சென்றனர்.
கடற்படை தாக்கியதில் செல்வராஜ் என்ற மீனவரின் மண்டை உடைந்தது. இதனால் அச்சமடைந்த மீனவர்கள் கரை திரும்பும் போது மீண்டும் வந்த இலங்கை கடற்படையினர், படகுகளின் மீது கற்களை வீசி சேதப்படுத்தினர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட படகுகள் சேதமடைந்தன. நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் பாதிக்கப்பட்டனர்.
கரை திரும்பிய மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் மூர்க்கத்தனமான தாக்குதலினால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதே வேளை சர்வதேச கடற்பாதுகாப்புச் சட்டம் ஒன்று அவசியம் என இலங்கைப் பாதுகாப்புச் செயலர் கோதாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Exit mobile version