இதுவரை இல்லாத அளவுக்கு பெட்ரோலியப் பொருட்களின் விலையை ஏற்றிய மத்திய அரசைக் கண்டித்து எதிர்கட்சிகள் இன்று ஒரு நாள் பந்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். பாஜக, கம்யூனிஸ்டுகள் ஆளும் மாநிலங்களில் முழு அளவிலான பந்த் கடை பிடிக்கப்படுகிறது. தமிழகத்தைச் சூழ உள்ள கர்நாடகம், கேரளம்.ஆந்திராவில் பந்த் பெருமளவு வெற்றியடைந்திருப்பதலாம் தமிழகமும் பாதிக்கப்பட்டிருக்கிறது. தொண்ணூறு சதவீத லாறிகள், ஆட்டோக்கள் ஓடாத நிலையில் சகஜ வாழ்க்கை ஓரளவு தமிழகத்தில் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மத்திய தரவர்க்கத்தினரிடம் இந்த பந்த் எவ்வித பாதிப்புகளையும் ஏற்படுத்த வில்லை. அதே நேரம் சென்னைக்கு வெளியே பந்த் பாதிப்புகள் தெரிகின்றன. தொழில் நகரான கோவை, திருப்பூர் போன்ற இடங்களில் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக சீர்குலைந்துள்ளதோடு, பேருந்துகள் வாகனங்களும் இயங்கவில்லை. ஆங்காங்கு ரயில் மறியல் போராட்டங்கள் நடந்து வருவதால் அனைத்து ரயில்களுமே மிக தாமதமாக சென்று வருகின்றன. சென்னை மீனம்பாக்கம் விமானநிலைத்திலிருந்து மும்பை, பெங்களூர் செல்லவிருந்த விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து களியக்காவிளை வழியாக கேரளா செல்லும் வாகனங்கள் மீது கற்கள் வீசப்பட்டதால் தமிழகத்தில் இருந்து கேரளா சென்ற அனைத்து வாகங்களும் குமரி மாவட்ட எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன. மதுரையில் பந்த் தொடர்பாக இரு கட்சித் தொண்டர்களிடையே கலவரம் மூண்டதால் பதட்டத்தில் கடைகளும் பேருந்துகளும் நிறுத்தப்பட்டன. கடைசியாக வந்த தகவலின் படி தமிழகம் முழுக்க பந்த் பெருமளவு வெற்றியடைந்திருக்கிறது. ஆனால் ஆளும் வர்க்க ஊடகங்கள் பந்த் போராட்டத்திற்கு எதிராக கடுமையான பிரச்சாரங்களைச் செய்து கொண்டிருக்கிறது.