வட இந்திய தேர்தல்களில் போட்டியிட்டு முஸ்லீம்களின் வாக்குகளை கணிசமாக பிரித்து வந்த அகில இந்திய மஜ்லிஸ்-ஏ-இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சி தமிழகத்தில் தினகரன் தலைமையில் இயங்கும் அமமுக கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது.
தமிழகம் – புதுச்சேரியில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் ஓவைசி கட்சி இன்று தொகுதி ஒப்பந்தத்துடன் அறிவிப்பையும் வெளியிட்டது. இந்திய அரசியலில் ஓவைசி பாஜகவை எதிர்க்கும் எவருடனும் கூட்டணி வைக்க மாட்டார்.மாறாக பாஜகவை எதிர்ப்பவர்களுக்குக் கிடைக்கும் முஸ்லீம் வாக்குகளை ஓவைசி பிரித்து விடுவதால் பல இடங்களில் பாஜக வென்றுள்ளது. இது பிகார் தேர்தலில் ஓவைசி மீதான குற்றச்சாட்டாகவும் வைக்கப்பட்டது.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் ஓவைசி கட்சி செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி தமிழகத்தில் வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, சங்கராபுரம் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் இக்கட்சி போட்டியிட இருக்கிறது. இக்கட்சி உருது பேசும் முஸ்லீம்களை குறிவைத்து தேர்தல் செய்கிறது. தமிழகத்தில் சென்னையில் உள்ள தொகுதிகளிலும், வேலூர், வாணியம்பாடி, சங்கராபுரம் போன்ற பகுதிகளிலும் உருது பேசும் முஸ்லீம்கள் அதிக அளவு வசிக்கிறார்கள். இந்த வாக்குகளை குறிவைத்தே ஓவைசி போட்டியிடுகிறார்.
தினகரன் ஏற்கனவே பாஜகவுடன் பல கட்டப் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர் ஆதரவு பத்திரிகையாளர்களே டெல்லியில் பேச்சுவார்த்தை நடப்பதை உறுதி செய்தார்கள். பாஜக அழுத்தத்தின் காரணமாகவே சசிகலா அரசியலை விட்டு ஒதுங்கினார். இந்நிலையில் பிகார் மேற்குவங்கம் போல திமுக கூட்டணிக்குச் செல்லவேண்டிய முஸ்லீம் வாக்குகளைப் பிரிக்க ஓவைசி தமிழகத்தின் மூன்று தொகுதிகளில் களமிரங்கியுள்ளார்.