Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழக எம்.பிக்களின் இலங்கை விஜயம் மஹிந்த – கருணாநிதி கூட்டுத்திட்ட நாடகம்!

karunanithi-mahinda இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கும் தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிக்கும் இடையில் இடம்பெற்ற இரகசியப் பேச்சுக்களைத் தொடர்ந்தே தமிழக எம்.பிக்கள் குழு இலங்கைக்கு வந்திருந்தது என்று தமிழகத்தில் நேற்று பரபரப்புத் தகவல்கள் வெளியாகின.

தமிழகத்திலிருந்து வெளிவரும் “மாலைச் சுடர்” நாளிதழ் இது தொடர்பாக நேற்று வெளியிட்ட செய்தி விவரும் வருமாறு:

சர்வதேச அளவில் கடும் நெருக்கடி எழுந்தபோதும், முகாம்களில் உள்ள தமிழர்களைச் சந்திக்க  இதுவரை யாரையும் அனுமதிக்காமல் இருந்த ஜனாதிபதி  ராஜபக்ஷ, தமிழக  எம்பிக்கள் குழுவை மட்டும் எப்படி அனுமதித்தார் என்பது குறித்த பரபரப்புத் தகவல்கள் தற்போது கசியத் தொடங்கியுள்ளன.

இது தொடர்பாக இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷ அண்மையில் முதலமைச்சர் கருணாநிதிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் இந்திய அரசின் சார்பாகவும், தமிழக அரசின் சார்பாகவும் பிரதிநிதிகளை அனுப்பினால் அவர்களை முகாம்களில் உள்ள தமிழர்களை சந்தித்து நிலைமைகளை கண்டறிய தாம்  அனுமதி அளிப்பதாக ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  

இந்தப் பிரதிநிதிகள் குழுவில் தமிழக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளோ, தமிழர் அமைப்பின் பிரதிநிதிகளோ இடம்பெறக்கூடாது என்று அவர்  அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார் எனத் தெரிகிறது. இந்தக் கடிதத்தை முதலமைச்சர் கருணாநிதி, பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ளார். அதன் பின்னர் மத்திய உள்துறை அமைச்சர் சென்னை வந்து  முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தினார்.
இந்தச் சந்திப்பின்போது இலங்கை செல்லும் எம்.பிக்கள் குழு, இந்திய அரசின் சார்பாகவோ, தமிழக அரசின் சார்பாகவோ செல்லத் தேவையில்லை என்று சிதம்பரத்தின் வாயிலாக முதலமைச்சரிடம்  பிரதமர் தெரிவித்தார் எனக் கூறப்படுகிறது.

அதன்படி தி.மு.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளின்  எம்.பிக்கள் இக்குழுவில் இடம்பெற்றனர். அதே சமயம் இக்குழுவில் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர்  திருமாவளவன் இடம்பெற காங்கிரஸ் தரப்பில் முதலில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

கூட்டணிக் கட்சியின் தலைவர் என்ற முறையில் அவர் குழுவில் இடம் பெறுவதற்கு டில்லியில் பேசி முதலமைச்சர் கருணாநிதி அனுமதி பெற்றிருந்தார் எனக் கூறப்படுகிறது. அந்த அடிப்படையிலேயே தமிழக  எம்.பிக்கள் குழுவில் திருமாவளவனும் இடம்பெற்றார் எனத் தெரிகிறது. இந்த எம்.பிக்கள் குழு இலங்கை செல்லும் முன் கருணாநிதியைச் சந்தித்துப் பேசியது.
அப்போது  இலங்கையில் அந்நாட்டு அரசுப் பிரதிநிதிகள் வழிகாட்டுதலின் பேரில்தான் இக்குழுவினர் செயல்பட வேண்டும் என்றும், அங்கு யாரையும் தன்னிச்சையாகச் சந்தித்துப் பேசவோ, விவரங்களைச் சேகரிக்கவோ கூடாது என்றும் பத்திரிகையாளர்கள் யாரையும்  சந்தித்துப் பேசக்கூடாது என்றும்  கருணாநிதி எச்சரித்து அனுப்பினார் எனக் கூறப்படுகிறது.
குறிப்பாக  திருமாவளவனை  எம்.பிக்கள் குழுவை விட்டு எங்கும் வெளியே போகக்கூடாது என்று முதல்வர் தெரிவித்து அனுப்பினார் என பரபரப்பாக பேசப்படுகிறது.
5 நாள் சுற்றுப்பயணம் முடிந்து சென்னை திரும்பிய  எம்.பிக்கள் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசக்கூடாது என்பதற்காகவே கருணாநிதி  விமான நிலையத்திற்கு முன்கூட்டியே சென்று சுமார் 40 நிமிடம் காத்திருந்து அவர்களை  அழைத்துக்கொண்டு அறிவாலயம் வந்ததார் எனவும் கூறப்படுகிறது.
அந்தக் குழு வந்த சிறிது  நேரத்திலேயே அவர்கள் யாரையும் பத்திரிகையாளர்களைச் சந்திக்க  அனுமதிக்காமல் முதலமைச்சர் கருணாநிதி தாமே செய்தியாளர்களைச் சந்தித்து பேசியமையிலும் பல்வேறு சந்தேகங்கள்  எழுந்துள்ளன.
5 நாள்கள் பயண விவரங்களை  எம்.பிக்கள் குழு வந்த 40 நிமிடத்திலேயே எப்படித் தனது அறிக்கையாகத் தயாரித்துத்  தர முடிந்தது என்ற கேள்வியும் பலமாக  எழுந்துள்ளது. இது தொடர்பாக திருமாவளவனை பத்திரிகையாளர்கள் தொடர்பு கொண்டு பேச முயன்றுள்ளனர். ஆனால் பத்திரிகையாளர்களால் அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை.இந்த நிகழ்வுகளை எல்லாம் ஒட்டுமொத்தமாக  வைத்துப் பார்க்கும்போது தமிழக எம்பிக்கள் குழுவின் இலங்கைப் பயணம் அந்நாட்டு அரசுக்குச் சார்பாகத் திட்டமிட்டு நடத்தப்பட்ட  ஒரு நடவடிக்கை என்றே அரசியல் பொது நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.  இப்படி அந்தப் பத்திரிகை தெரிவித்துள்ளது.
Exit mobile version