Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழக அரசின் 7 துறைகளில் லஞ்சம் கொடுக்காமல் எந்த வேலையும் நடப்பதில்லை!

lansam தமிழக அரசின் 7 துறைகளில் லஞ்சம் கொடுக்காமல் எந்த வேலையும் நடப்பதில்லை என முதல்வர் கருணாநிதியிடம் தெரிவித்துள்ளதாக அகில இந்திய ஊழல் எதிர்ப்புக் குழுவின் மாநிலத் தலைவர் மு. ரகுநாதன் தெரிவித்தார்.

 

 திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை நிருபர்களிடம் அவர் கூறியதாவது;

 

 முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் 1971ஆம் ஆண்டு அனைத்திந்திய ஊழல் எதிர்ப்பு குழு அமைக்கப்பட்டது. அதன் தற்போதைய தலைவராக மாயாபதி திரிபாதியும், செயல் தலைவராக டி.எஸ். கில்லும், தேசிய முதன்மை ஆலோசகராக முன்னாள் டி.ஜி.பி. ஸ்ரீபாலும் உள்ளனர்.

 

 நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் ஊழலை ஒழிப்பதே இந்த குழுவின் பிரதான நோக்கமாகும். தமிழ்நாட்டில் லஞ்சம் கொடுக்காமல் எந்தக் காரியமும் நடப்பதில்லை.

 

 பதிவுத்துறை, உள்ளாட்சித்துறை, வருவாய்த்துறை, வட்டாரப் போக்குவரத்து துறை, மின்துறை, காவல்துறை, மருத்துவத்துறை ஆகிய 7 துறைகளிலும் ஊழல் அதிகரித்துள்ளது என்றும் அத்துறைகள் மீது நடவடிக்கை தேவை என்றும் முதல்வரிடம் கடந்த ஆண்டு நவம்பரில் கோரிக்கை வைத்தோம். அதன்படி அந்த துறைகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் சமீபகாலமாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

 

 அதே சமயம், அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையின் முகவரி, தொலைபேசி எண்களை எழுதி வைத்துள்ளதற்கு அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

 

 லஞ்சம் பெறும் அரசு அதிகாரிகளை தாற்காலிகமாக பணிநீக்கம் செய்தால் மட்டுமே போதாது. அவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்வதோடு நிரந்தரப் பணிநீக்கம் செய்து கடுமையான தண்டனை வழங்கும் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

 

 லஞ்ச ஒழிப்பு வாரியம் அமைக்கப்பட வேண்டும் என ஏற்கெனவே கோரிக்கை வைத்துள்ளோம். அதை தமிழக அரசு உடனே நிறைவேற்ற வேண்டும்.

 

 அதன் தலைவராக ஸ்ரீபாலை நியமித்து ஊழல் எதிர்ப்பு குழுவினரை உறுப்பினர்களாக்க வேண்டும்.

 

 தமிழ்நாட்டில் சமீபகாலமாக விவாகரத்துகள் அதிகமாக நடைபெற்று வருகின்றன. அதற்கு ஆணுக்கும், பெண்ணுக்கும் உடல்ரீதியிலான குறைபாடுகள் சுட்டிக் காட்டப்படுகின்றன. எனவே, திருமணத்துக்கு முன்னர் ஆணுக்கும், பெண்ணுக்கும் மருத்துவச் சான்றிதழ் பெறும் செயல்பாட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்.

 

 கல்வி நிறுவனங்களில் பெருகி வரும் நன்கொடை வசூலை தடுக்க தனியாக கண்காணிப்புக் குழுவை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

 

 நியமனம்:முன்னதாக, குழுவின் தென் மண்டல நிர்வாக செயலராக நியமிக்கப்பட்டுள்ள தூத்துக்குடியைச் சேர்ந்த பி.டி. பட்டுக்குமாருக்கு அடையாள அட்டையை வழங்கினார் ரகுநாதன்.

 

 தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பட்டுக்குமார், திருநெல்வேலி மாவட்டத் தலைவர் முகம்மது மொய்தீன், செயலர் எம். பாலசுப்பிரமணியன், மகளிர் பிரிவு செயலர் அமீர்பாத்திமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Exit mobile version